வரி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை: நிர்மலா சீதாராமன்

6-வது முறையாக நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்த நிர்மலா சீதாராமன்
வரி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை: நிர்மலா சீதாராமன்
2 min read

மத்திய இடைக்கால நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.

இடைக்கால நிதிநிலை அறிக்கை அறிவிப்புகள்:

  • எங்களுடைய அரசு மேற்கொண்ட சிறப்பான பணிகளின் அடிப்படையில், மக்கள் மீண்டும் எங்களை ஆட்சியில் அமர்த்துவார்கள் என எதிர்பார்க்கிறோம்.

  • கடந்த 10 ஆண்டுகளில் இந்தியப் பொருளாதாரம் மிகப் பெரிய நேர்மறையான மாற்றத்தைக் கண்டுள்ளது. நாட்டு மக்கள் நம்பிக்கையுடனும் நேர்மறையான எண்ணத்துடனும் எதிர்காலத்தை எதிர்நோக்கியுள்ளார்கள். மக்களின் ஆசியுடன் 2014-ல் பிரதமர் மோடி தலைமையில் நாங்கள் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தபோது, நாடு சப்கா சாத், சப்கா விகாஸை மந்திரமாகக் கொண்டு நிறைய சவால்களை எதிர்கொண்டது. அரசு இந்த சவால்களை முனைப்புடன் எதிர்கொண்டு கடந்தது.

  • கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி பேர் வறுமையிலிருந்து வெளிவந்துள்ளார்கள்.

  • விளையாட்டுத் துறை இளைஞர்கள் புதிய உயரத்தை அடைந்திருப்பதை எண்ணி நாடு பெருமை கொள்கிறது. 2023 ஆசிய விளையாட்டுப் போட்டிகள் மற்றும் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக பதக்கங்களை வென்றுள்ளது தன்னம்பிக்கையை வெளிப்படுத்துகிறது. 2023-ல் உலக செஸ் சாம்பியன் மேக்னஸ் கார்ல்செனுக்கு எதிரான போட்டியில் நமது நெ.1 செஸ் வீரர் பிரக்ஞானந்தா கடுமையான நெருக்கடியைக் கொடுத்தார். இன்று இந்தியாவில் 80-க்கும் மேற்பட் செஸ் கிராண்ட்மாஸ்டர்கள் உள்ளார்கள். 2010-ல் 20-க்கும் அதிகமான கிராண்ட்மாஸ்டர்களே இந்தியாவில் இருந்தார்கள்.

  • ஆட்சி முறை, வளர்ச்சி மற்றும் செயல்பாட்டிலும் அரசு கவனத்தை செலுத்துகிறது.

  • முன்னெப்போது இல்லாத வளர்ச்சியாக அடுத்த 5 ஆண்டுகள் இருக்கும்.

  • ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ், ஆஷா பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்களுக்கும் நீட்டிக்கப்படும்.

  • கரோனா தொற்று பாதிப்பு இருந்தபோதும்கூட, பிரதமரின் கிராமப்புற வீட்டு வசதித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்தது. 3 கோடி வீடுகள் எனும் இலக்கை அடைவதை நெருங்கியுள்ளோம். குடும்பங்களினுடைய எண்ணிக்கை அதிகரித்ததைத் தொடர்ந்து, இதற்கு ஈடாக அடுத்த 5 ஆண்டுகளில் மேலும் 2 கோடி வீடுகள் கட்டப்படும்.

  • வீட்டின் மேற்கூரையில் சோலார் அமைப்பதன் மூலம், 1 கோடி குடும்பங்கள் மாதந்தோறும் 300 யூனிட் வரை இலவச மின்சாரத்தைப் பெறவுள்ளன.

  • ஏற்கெனவே உள்ள மருத்துவ உள்கட்டமைப்புகள் மூலம் நிறைய மருத்துவக் கல்லூரிகளை அமைக்க எங்களுடைய அரசு திட்டமிட்டு வருகிறது. இதற்காகப் பிரத்யேகமாக ஒரு குழு அமைக்கப்படும். அந்தக் குழு இதிலுள்ள சிக்கல்களை ஆராய்ந்து உரிய பரிந்துரைகளை முன்வைக்கும்.

  • ஜூலையில் தாக்கல் செய்யப்படும் விரிவான நிதிநிலை அறிக்கையில், வளர்ந்த இந்தியா எனும் இலக்கை அடைவதற்கான விரிவான திட்டத்தை நாங்கள் தாக்கல் செய்வோம்.

  • தகுதிவாய்ந்த நடுத்தர வர்க்கத்தினர் சொந்த வீடுகளைக் கட்ட அரசு உதவி செய்யும்.

  • நேரடி மற்றும் மறைமுக வரி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை.

  • 2024-25-ம் ஆண்டில் நிதிப் பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 5.1 சதவிகிதமாக இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.

இடைக்கால நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒருமணி நேரத்துக்கு சற்று குறைவாக தாக்கல் செய்தார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in