மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவின் தாயார் மாதவி ராஜே காலமானார்.
கடந்த இரு மாதங்களாக உடல்நலக் குறைவு காரணமாக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த மாதவி ராஜே சிந்தியாவின் உயிர் இன்று காலை பிரிந்தது. நிமோனியா மற்றும் செப்சிஸால் பாதிக்கப்பட்டிருந்த அவர் கடந்த சில நாள்களாக வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சைப் பெற்று வந்தார்.
இவரது மறைவுக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மற்றும் பிஹார் துணை முதல்வர் சாம்ராத் சௌதரி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.
நேபாள ராஜ குடும்பத்தைச் சேர்ந்தவரான மாதவி ராஜே, காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சருமான மாதவ்ராவ் சிந்தியாவைத் திருமணம் செய்துகொண்டார். மாதவ்ராவ் சிந்தியா 2001-ல் விமான விபத்தில் உயிரிழந்தார்.
குவாலியர் ராஜ குடும்பத்தின் ராஜமாதாவான இவர் கல்வி மற்றும் மருத்துவத் துறையில் இயங்கும் 24 அறக்கட்டளைகளின் தலைவராக இருந்தார்.