

பெட்ரோல், டீசல் மீதான சிறப்பு கலால் வரி லிட்டருக்கு ரூ. 10 குறைக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது மக்களைப் பாதுகாக்கும் முடிவு என்று மத்திய அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.
ஈரான் போர் காரணமாக உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்து வரும் நிலையில், பெட்ரோல் மற்றும் டீசல் மீதான சிறப்பு கலால் வரியை லிட்டருக்கு ரூ.10 குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த வரி குறைப்புக்குப் பிறகு, பெட்ரோல் மீதான மொத்த கலால் வரி லிட்டருக்கு ரூ.21.9-லிருந்து ரூ.11.9 ஆகவும், டீசல் மீதான வரி ரூ.17.8-லிருந்து ரூ.7.8 ஆகவும் குறைந்துள்ளது. தற்போது பெட்ரோலுக்கு சிறப்பு கலால் வரி லிட்டருக்கு ரூ.3 ஆகவும், டீசலுக்கு பூஜ்ஜியமாகவும் குறைக்கப்பட்டுள்ளது.
நேரடி விலை குறைப்பு இல்லை
இந்த வரி குறைப்பால் பெட்ரோல் பங்குகளில் நேரடியாக விலை குறைப்பு ஏற்படாது. ஆனால், இந்த நடவடிக்கை எண்ணெய் நிறுவனங்கள் சந்திக்கும் இழப்புகளைக் குறைக்க மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் மூலம் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை ஏறினாலும் இந்தியாவில் பெட்ரோல் விலை உயரும் நிலை ஏற்படாது.
எண்ணெய் நிறுவனங்களுக்கு பெரும் நிவாரணம்
தற்போது எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோலில் லிட்டருக்கு சுமார் ரூ.26 இழப்பையும், டீசலில் லிட்டருக்கு ரூ.81.90 இழப்பையும் சந்தித்து வருகின்றன. இந்த இழப்பு தினசரி ரூ.2,400 கோடியாக உள்ளது. வரி குறைப்பு மூலம் இந்த இழப்பில் லிட்டருக்கு ரூ.10 குறையும். இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் உள்ளிட்ட பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் இதன் மூலம் நிவாரணம் பெறும். ஆண்டுக்கு இந்த இழப்புகளில் 30-40% வரை இந்த நடவடிக்கை மூலம் ஈடுகட்ட முடியும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
அரசுக்கு வருவாய் இழப்பு
இந்த வரி குறைப்பால் அரசுக்கு ஆண்டுக்கு சுமார் ரூ.1.5 லட்சம் கோடி முதல் ரூ.1.7 லட்சம் கோடி வரை வருவாய் இழப்பு ஏற்படும் என்று மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. மாற்றாக, டீசல் மற்றும் விமான எரிபொருள் ஏற்றுமதிக்கு புதிய வரி விதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இரு வாரத்துக்கு ஒருமுறை சுமார் ரூ.1,500 கோடி வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மக்களைப் பாதுகாக்கும் முடிவு
இதுகுறித்து பெட்ரோலிய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தனது எக்ஸ் தளப் பதிவில் கூறியுள்ளதாவது:-
கடந்த ஒரு மாதத்தில் சர்வதேச கச்சா எண்ணெய் விலை வானத்தைத் தொட்டுள்ளது. ஒரு பீப்பாய்க்கு சுமார் 70 டாலரிலிருந்து 122 டாலராக உயர்ந்துள்ளது. இதன் விளைவாக, தென் கிழக்கு ஆசிய நாடுகளில் 30% - 50% வரை, வட அமெரிக்க நாடுகளில் 30%, ஐரோப்பாவில் 20% மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் 50% வரை விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், மத்திய அரசு அரசின் நிதியில் பாரத்தை ஏற்று, சர்வதேச விலை ஏற்ற இறக்கத்திலிருந்து மக்களைப் பாதுகாக்கும் முடிவை அரசு எடுத்துள்ளது. இது, உயர்ந்த சர்வதேச விலை நிலையில் எண்ணெய் நிறுவனங்கள் சந்திக்கும் மிகப்பெரிய இழப்புகளை குறைக்கும் வகையில், அரசு தன் வரி வருவாயில் பெரும் தாக்கத்தை ஏற்றுள்ளது” என்று கூறியுள்ளார்.
The Union Minister has explained that the central government's decision to reduce the special excise duty on petrol and diesel by Rs 10 per liter is a decision to protect the people.