இலங்கைத் தமிழர்கள் சட்டவிரோதக் குடியேறிகள் அல்ல: மத்திய அரசு | Sri Lankan Tamils

"இலங்கைத் தமிழர்களுக்கான சட்டப்பூர்வ அங்கீகாரம் அளிக்கும் நோக்கத்தின் முதல் படியாக உள்ள இந்த அறிவிப்பினை..."
இலங்கைத் தமிழர்கள் சட்டவிரோதக் குடியேறிகள் அல்ல: மத்திய அரசு | Sri Lankan Tamils
ANI
1 min read

ஜனவரி 9, 2015-க்கு முன்பு இந்தியா வந்து அரசிடம் பதிவு செய்த இலங்கைத் தமிழர்கள் சட்டப்பூர்வமாக இந்தியாவிலேயே இருக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

மத்திய அரசின் இந்த முடிவானது மகிழ்ச்சியை அளிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

குடிவரவு மற்றும் வெளிநாட்டினர் சட்டம், 2025-ன் படி, கடவுச்சீட்டு அல்லது உரிய ஆவணங்களின்றி இந்தியாவில் வசித்து வரும் வெளிநாட்டினருக்கு ரூ. 5 லட்சம் அபராதம் அல்லது 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லது இரண்டுமே வழங்கப்படலாம். இந்தச் சட்டத்திலிருந்து இலங்கைத் தமிழர்களுக்கு மட்டும் விலக்கு அளித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

ஜனவரி 9, 2015-க்கு முன்பு இந்தியாவுக்கு வந்து அரசிடம் பதிவு செய்த இலங்கைத் தமிழர்களுக்கு மட்டுமே இந்த விலக்கானது அளிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், ஜனவரி 9, 2015-க்கு முன்பு இந்தியா வந்து அரசிடம் பதிவு செய்த இலங்கைத் தமிழர்கள் யாரும் சட்டவிரோதக் குடியேறிகளாகக் கருதப்படமாட்டார்கள்.

மத்திய அரசின் இந்த முடிவை வரவேற்று எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

"09.01.2015-க்கு முன் இலங்கை நாட்டில் இருந்து இந்தியாவிற்கு குடியேறி, அரசிடம் அகதிகளாகப் பதிவு செய்த இலங்கைத் தமிழர்களை சட்டப்பூர்வமாகத் தங்குவதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

நம் தொப்புள்கொடி உறவுகளான இலங்கைத் தமிழர்கள், போர்ச்சூழல், பொருளாதார நெருக்கடிகள், திமுக - காங்கிரஸ் கூட்டணியின் மன்னிக்க முடியாத துரோகத்தால் நடந்த இனப்படுகொலை ஆகியவற்றின் வடுகளைச் சுமந்து, தமிழகத்தை வந்தடைந்தனர்.

அவர்களுக்கான உரிய அங்கீகாரம் அளிக்கப்பட வேண்டும் என்பது அஇஅதிமுகவின் நீண்டகால கோரிக்கை. எனது அறிவுறுத்தலின்படி, இலங்கைத் தமிழர்களுக்கான அங்கீகாரம் குறித்து நாடாளுமன்றத்திலும் கழக உறுப்பினர்கள் கோரி வந்தனர்.

இலங்கைத் தமிழர்களுக்கான சட்டப்பூர்வ அங்கீகாரம் அளிக்கும் நோக்கத்தின் முதல் படியாக உள்ள இந்த அறிவிப்பினை அஇஅதிமுக மிகுந்த மனமகிழ்வோடு வரவேற்கிறது.

இதனை சாத்தியப்படுத்திய மாண்புமிகு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்களுக்கும் அஇஅதிமுக சார்பிலும், தமிழக மக்கள் மற்றும் இலங்கைத் தமிழர்கள் சார்பிலும் நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மனிதம் தழைத்தோங்கட்டும்!" என்று எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.

Srilankan Tamils | Ministry of Home Affairs | MHA | Edappadi Palaniswami | ADMK | Amit Shah | Union Government

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in