
வாக்குறுதி அளித்தபடி ஜம்மு–காஷ்மீருக்கு விரைவில் மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தகவல் அளித்துள்ளார்.
2019-ல் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் மறுசீரமைக்கப்பட்டு, சட்டப்பேரவையைக் கொண்ட ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம், சட்டப்பேரவை இல்லாத லடாக் யூனியன் பிரதேசம் என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. அதன் பிறகு கடந்தாண்டு செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் முதல்முறையாக ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டப்பேரவைக்குத் தேர்தல் நடைபெற்று, ஓமர் அப்துல்லா முதல்வராகப் பதவியேற்றார்.
இந்நிலையில், கடந்த அக்.18 அன்று ஓமர் அப்துல்லா தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில், ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கக்கோரி மத்திய அரசை வலியுறுத்தும் நோக்கில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், 2025-ம் ஆண்டிற்கான டைம்ஸ் நவ் மாநாடு நேற்று (மார்ச் 29) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு அமித்ஷா கூறியதாவது,
`ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து மீண்டும் வழங்கப்படும் என்று நாங்கள் வாக்குறுதி அளித்துள்ளோம். தொடக்கத்தில் இருந்தே மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்று கூறிவருகிறோம். ஆனால் எப்போது அது வழங்கப்படும் என்பதை பொதுவெளியில் கூற முடியாது.
நடந்து முடிந்த தேர்தலில் கடந்த 40 வருடங்களில் இல்லாத அளவுக்கு முதல் முறையாக, ஒரு வாக்கு மையத்தில்கூட மறு வாக்குப்பதிவு நடைபெறவில்லை. ஒரு கண்ணீர்ப் புகை குண்டோ அல்லது தோட்டாவோ சுடப்படவில்லை. 60 சதவீத வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். இது மிகப்பெரிய மாற்றம்’ என்றார்.