
நீட் தேர்வை ஆன்லைனில் நடத்தும் வகையிலான ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தகவல் தெரிவித்துள்ளார்.
இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு தற்போது காகிதம், பேனா முறையில் நடைபெற்று வருகிறது. இந்தத் தேர்வை ஆன்லைன் வழியாக நடத்தக்கூடிய சாத்தியக்கூறுகள் குறித்து, மத்திய கல்வி அமைச்சகமும், சுகாதார அமைச்சகமும் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அமைச்சர் தர்மேந்திர பிரதான், `நிர்வாகரீதியில் சுகாதார அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது நீட் தேர்வு. இதனால் நீட் தேர்வை காகிதம், பேனா முறையில் நடத்துவதா அல்லது ஆன்லைன் வழியாக நடத்துவதா என்பது குறித்து சுகாதார அமைச்சகத்துடன் ஆலோசனையில் ஈடுபட்டுவருகிறோம்.
சுகாதார அமைச்சர் ஜெ.பி. நட்டா தலைமையிலான அதிகாரிகளுடன் இரண்டு கட்ட பேச்சுவார்த்தையை முடித்துள்ளோம். தேர்வு நடத்துவதற்கான பொருத்தமான முறையின் அடிப்படையில் தேர்வை என்.டி.ஏ. நடத்தும். நீட் தேர்வை நடத்தும் முறை குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும்’ என்றார்.
1,08,000 இளங்கலை மருத்துவப் படிப்பு இடங்களுக்கான நீட் நுழைவுத் தேர்வு நடப்பாண்டின் மே 4-ல் நடைபெற்றது. இதில் நாடு முழுவதும் மொத்தம் 24 லட்சம் மாணவர்கள் கலந்துகொண்டனர்.
நீட் தேர்வு நடைபெறுவதற்கு முன்பே பீஹார் மாநிலம் பட்னாவில் வினாத்தாள் கசிந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதை அடுத்து, நீட் தேர்வை நடத்தும் என்.டி.ஏ. அமைப்பை வலுப்படுத்துவது குறித்து மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்க, முன்னாள் இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையில் உயர்நிலை குழு அமைக்கப்பட்டது.