100 நாள் வேலைத் திட்டம் பெயர் மாற்றம்: எதிர்க்கட்சியினர் கேள்வி! | MGNREGA |

புதிய மசோதாவின் பிரிவு 22-ன் கீழ் மொத்தச் செலவில் 40 சதவீதத்தை மாநில அரசு ஏற்க வேண்டும்.
MGNREGA to be reframed as Vikisit Bharat G RAM G bill, gurantees 125 days of work
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்துக்கு மாற்றாக புதிய திட்டத்தை அறிமுகம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
1 min read

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்துக்கு மாற்றாக விக்சித் பாரத் - கேரன்டி ஃபார் ரோஸ்கர் மற்றும் அஜீவிகா திட்டத்தை அறிமுகம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இது தொடர்புடைய மசோதாவை குளிர்காலக் கூட்டத்தொடரிலேயே நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது.

புதிய திட்டத்தின்படி 100 நாள்கள் வேலை உறுதித் திட்டமானது 125 நாள்களாக உயர்த்தப்படும் எனத் தெரிகிறது. இந்த மசோதாவானது சுருக்கமாக VB-G-Ram-G (விபி-ஜி-ராம்-ஜி) என்று அழைக்கப்படவுள்ளது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ், தொழிலாளர்களுக்கான ஊதியத்தை மத்திய அரசே முழுமையாக ஏற்கும். உள்கட்டமைப்புச் செலவுகள், இதர நிர்வாகச் செலவுகளை மாநில அரசுகள் ஏற்கும். ஆனால், தற்போது அறிமுகம் செய்யவுள்ள புதிய மசோதாவில் நிதிப் பகிர்வு முறை அமலுக்கு வருகிறது.

புதிய மசோதாவின் பிரிவு 22-ன் கீழ் மொத்தச் செலவில் 40 சதவீதத்தை மாநில அரசு ஏற்க வேண்டும். மீதமுள்ள 60 சதவீதத்தை மத்திய அரசு ஏற்க வேண்டும். இதன்மூலம், மாநிலங்கள் மீது நிதிச் சுமை அதிகரிக்கும். வடகிழக்கு மாநிலங்கள், ஹிமாலய மலைப் பிரதேச மாநிலங்கள் மற்றும் மூன்று யூனியன் பிரதேசங்களுக்கு மட்டும் இதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

மேலும், புதிய மசோதாவின்படி மாநிலங்களுக்கான பட்ஜெட்டை தீர்மானிப்பது மட்டுமில்லாமல் இத்திட்டத்தை எங்கு செயல்படுத்த வேண்டும் என்பதையும் மத்திய அரசே தீர்மானிக்கவுள்ளது.

காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி இத்திட்டம் குறித்து கேள்வியெழுப்பியுள்ளார். "மகாத்மா காந்தியின் பெயரை எதற்காக நீக்குகிறார்கள்? இந்தியாவின் மிகப் பெரிய தலைவராகப் போற்றப்படுபவர் காந்தி. பெயர் மாற்றம் நிகழும்போதெல்லாம், அதை ஆவணங்களில் மாற்றுவதற்காக பெரும் செலவுகள் ஏற்படுகின்றன. இதன் நோக்கம் என்னவென்று தெரியவில்லை" என்றார் அவர்.

காங்கிரஸ் எம்.பி. ரன்ஜீத் ரஞ்சன் கூறுகையில், "பாஜகவுக்கு முன்பு ஜவஹர்லால் நேரு மற்றும் இந்திரா காந்தியிடம் பிரச்னை இருந்தது. தற்போது காந்தியின் பிரச்னை இருப்பதை நாடு பார்த்துக் கொண்டிருக்கிறது. மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் மாநிலங்களுக்கு சரியான நேரத்தில் நிதி ஒதுக்குவதை உறுதி செய்ய வேண்டும். 100 நாள்கள் வேலையை 150 நாள்களாக உயர்த்தி, திட்டத்தை மேம்படுத்த வேண்டும். ஆனால், வெறுமென பெயர்களை மாற்றுவதில் மட்டும் அரசு கவனமாக இருக்கிறது" என்றார் ரன்ஜீத் ரஞ்சன்.

MGNREGA | Mahatma Gandhi National Rural Employment Guarantee Act | Priyanka Gandhi |

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in