
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள மாதவ் தேசியப் பூங்காவை, இந்தியாவின் 58-வது புலிகள் காப்பகமாக அறிவித்துள்ளது மத்திய அரசு.
தேசிய விலங்கான புலிகளின் எண்ணிக்கை சரிவை சந்தித்ததை அடுத்து, 1973-ல் புலிகள் பாதுகாப்புக்கான பிரத்யேக திட்டத்தை வகுத்தது அன்றைய மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகம். திட்டத்தின் ஒரு பகுதியாக புலிகள் இருந்த தேசிய பூங்காக்களும், வனவிலங்கு சரணாலயங்களும், புலிகள் காப்பகங்களாக வரைமுறைப்படுத்தப்பட்டன.
அந்த வகையில், முதற்கட்டமாக 1973-ல் நாடு முழுவதும் 9 புலிகள் காப்பகங்கள் அறிவிக்கப்பட்டன. கடந்த மாதம் வரை இந்தியாவில் மொத்தம் 57 புலிகள் காப்பகங்கள் இருந்தன. இந்நிலையில், மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த மாதவ் தேசியப் பூங்காவை இந்தியாவின் 58-வது புலிகள் காப்பகமாக அறிவித்துள்ளது மத்திய அரசு.
ஏற்கனவே மத்திய பிரதேசத்தில் 8 புலிகள் காப்பகம் உள்ள நிலையில், மாதவ் புலிகள் காப்பகம் அம்மாநிலத்தின் 9-வது புலிகள் காப்பகமாகியுள்ளது. இதன் மூலம் அதிகமான புலிகள் காப்பகத்தை கொண்ட இந்திய மாநிலம் என்ற சாதனையை தக்கவைத்துக்கொண்டுள்ளது மத்திய பிரதேசம்.
கடைசியாக கடந்த 2023-ல் மேற்கொள்ளப்பட்ட புலிகள் கணக்கெடுப்பின்படி இந்திய காடுகளில் மொத்தம் 3,682 புலிகள் உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி இந்திய மாநிலங்களிலேயே மிக அதிகமாக, மத்திய பிரதேசத்தில் 785 புலிகள் உள்ளன என்று தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.
58-வது புலிகள் காப்பகம் தொடர்பாக மகிழ்ச்சி தெரிவித்து தன் எக்ஸ் கணக்கில் பதிவிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, `விலங்குகளை காப்பதிலும், நிலையான உலகத்திற்கு பங்களிப்பதிலும் இந்தியா எப்போதுமே முன்னணியில் இருக்கும்’ என்றார்.