நேரடிப் பணி நியமன நடைமுறை ரத்து: மத்திய அரசு
மத்திய அரசுப் பணிகளில் யுபிஎஸ்சி தேர்வில் பங்கெடுக்காதவர்கள் நேரடியாக நியமிக்கப்படும் நடைமுறையை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.
மத்திய அரசின் பல்வேறு துறைகளில் இணைச் செயலர் முதல் துணைச் செயலர்கள் வரையிலான 45 பணியிடங்களுக்கு நேரடிப் பணி நியமன நடைமுறை (லேட்ரல் என்ட்ரி) மூலம் நிரப்ப யுபிஎஸ்சி சார்பில் விளம்பரம் வெளியிடப்பட்டது. யுபிஎஸ்சி தேர்வில் பங்கெடுக்காதவர்கள் நேரடியாக நியமிக்கப்படும் நடைமுறையில் இடஒதுக்கீடு முறை பின்பற்றப்படவில்லை எனக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதற்கு ராகுல் காந்தி, முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்தார்கள். நேரடிப் பணி நியமனம் என்பது சமூக நீதி மீதான நேரடித் தாக்குதல் என முதல்வர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டார். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள சிராக் பாஸ்வானும் இதுதொடர்பாக கருத்து தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் யுபிஎஸ்சி தலைவருக்குக் கடிதம் எழுதியுள்ளார். இதில், பிரதமரின் வழிகாட்டுதலின்படி நேரடிப் பணி நியமனம் தொடர்புடைய விளம்பரத்தை ரத்து செய்யச் சொல்லி மத்திய அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
"நேரடிப் பணி நியமன நடைமுறை மூலம் மத்திய அரசுப் பணிகளில் பல்வேறு நிலைகளிலுள்ள பணியிடங்கள் தொடர்பாக யுபிஎஸ்சி அண்மையில் விளம்பரத்தை வெளியிட்டிருந்தது. நேரடிப் பணி நியமன நடைமுறையானது அரசியலமைப்புச் சட்டத்தால் பாதுகாக்கப்பட்ட சமத்துவம் மற்றும் சமூக நீதிக் கொள்கைகளுடன் ஒத்துப்போக வேண்டும் என்பதில் பிரதமர் உறுதியான நம்பிக்கையைக் கொண்டுள்ளார்.
அரசு சேவைகளில் விளிம்புநிலை சமூகத்தில் உள்ள தகுதிவாய்ந்தவர்கள் உரிய பிரதிநிதித்துவத்தைப் பெற சமூக நீதியை நிலைநாட்டுவது மிக முக்கியம். இந்த நியமனங்களில் இடஒதுக்கீட்டுக்கான அம்சங்கள் கிடையாது.
சமூக நீதியை உறுதி செய்ய வேண்டும் என்ற பிரதமரின் பார்வையில் இது மறுஆய்வு செய்யப்பட்டு, சீர்திருத்தம் செய்யப்பட வேண்டும். எனவே, நேரடிப் பணி நியமன நடைமுறை தொடர்பாக 17.8.2024 அன்று வெளியிடப்பட்ட விளம்பரத்தை ரத்து செய்ய வேண்டும்" என மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.