
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து 8-வது முறையாக மத்திய நிதிநிலை அறிக்கையை நாளை தாக்கல் செய்கிறார். 2025-26-ம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.3 சதவீதம் முதல் 6.8 சதவீதம் வரை இருக்கும் என பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய நிதிநிலை அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வது மத்திய நிதியமைச்சராக இருந்தாலும், இதன் பின்னணியில் ஓர் அணி இயங்கியிருக்கும்.
நிதிநிலை அறிக்கையைத் தயார் செய்வதில் பின்னணியில் இருப்பவர்கள் யார்?
தலைமைப் பொருளாதார ஆலோசகர் - அனந்த நாகேஸ்வரன்
அனந்த நாகேஸ்வரன் இந்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகராக உள்ளார். பொருளாதார ஆய்வறிக்கையைத் தலைமைப் பொருளாதார ஆலோசகர் தயார் செய்வார். மத்திய நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதற்கு ஒரு நாள் முன்பு, பொருளாதார ஆய்வறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். பொருளாதார ஆய்வறிக்கை தான் எதிர்காலப் பொருளாதாரத் திட்டங்களுக்கான வழிகாட்டியாக இருக்கும்.
பொருளாதார நிலையை ஆய்வு செய்து, வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கான சீர்திருத்தங்களை தலைமைப் பொருளாதார ஆலோசகர் பரிந்துரைக்க வேண்டும்.
நிதி மற்றும் வருவாய்த் துறைச் செயலர் துஹின் காந்த் பாண்டே
வரி குறைப்பு மற்றும் வரிச் சலுகைகள் தொடர்புடைய கோரிக்கைகளைக் கையாண்டு, வரி மூலம் வருவாய் ஈட்டுவது நிதி மற்றும் வருவாய்த் துறைச் செயலரின் பொறுப்பு.
செலவினத் துறைச் செயலர் - மனோஜ் கோவில்
அரசினுடைய செலவை நிர்வகிப்பதில் இவர் முக்கியப் பங்கு வகிப்பார். அரசின் செலவினங்களினுடையத் திறன் மேம்படுவதில் கவனம் செலுத்த வேண்டும். அரசு செய்யும் செலவு, வருவாய்க்கான இலக்கோடு ஒத்துப்போக வேண்டும் என்பதை உறுதி செய்ய வேண்டும்.
பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சர் - அஜய் சேத்
நிதிநிலை அறிக்கை குறித்த இறுதி ஆவணங்களைத் தயார் செய்வது இவருடைய முக்கியப் பொறுப்பாகும். நிதிநிலை அறிக்கை பிரிவின் தலைவராக இவர் செயல்படுவார். உலகளவில் மாற்றம் அடையும் நிதிச் சூழல்களுக்கு மத்தியில், நிலைத் தன்மையை உறுதி செய்யும் வகையில், பொருளாதாரக் கொள்கைகளை அமைக்க வேண்டும்.
நிதிச் சேவைகள் துறைச் செயலர் - நாகராஜூ
நாட்டின் வங்கி மற்றும் நிதிச் சேவைகள் துறையை வலுப்படுத்துவது இவருடையப் பொறுப்பு. நிதித் துறை சார்ந்த பொருளாதார நிறுவனங்களுக்கான ஒழுங்குமுறை, காப்பீடுகளை விரிவாக்கம் செய்வது உள்ளிட்டவற்றை உறுதி செய்வது இந்தத் துறைச் செயலரின் கடமை.
முதலீடு மற்றும் பொதுச்சொத்து மேலாண்மைத் துறைச் செயலர் - அருனிஷ் சாவ்லா
அரசின் முதலீடுகளைக் குறைப்பது, அரசின் வசம் உள்ள சொத்துகளைக் கொண்டு பணமாக்குதல் உள்ளிட்டவை இவருடைய முக்கியப் பொறுப்பாகும். அரசின் நிதி சார்ந்த சொத்துகளை நிர்வகிப்பது இத்துறைச் செயலரின் முக்கியப் பங்கு.