வடமாநிலங்கள் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் வெள்ளத்தடுப்பு பணிகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் வெள்ளப் பாதிப்புக்கு நிதி ஒதுக்கப்படவில்லை என தமிழ்நாடு எம்.பி. க்கள் நாடாளுமன்றத்தில் முழக்கம்.
புதிய வரி முறை
0 - 3 லட்சம் - வரி இல்லை
ரூ. 3 லட்சம் முதல் ரூ. 7 லட்சம் - 5%
ரூ. 7 லட்சம் முதல் ரூ. 10 லட்சம் - 10%
ரூ. 10 லட்சம் முதல் ரூ. 12 லட்சம் - 15%
ரூ. 12 லட்சம் முதல் ரூ. 15 லட்சம் - 20%
ரூ. 15 லட்சத்துக்கு மேல் - 30%
புதிய வரி நடைமுறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள சிறிய மாற்றத்தால், வரி செலுத்துபவர்கள் ஆண்டுக்கு ரூ. 17,500 சேமிக்க முடியும்.
அனைத்து வகுப்பு முதலீட்டாளர்களுக்குமான ஏஞ்சல் வரி ரத்து செய்யப்படுகிறது. புதிதாகத் தொழில் தொடங்க முனைபவர்களை ஊக்கப்படுத்துவதற்காக இது அறிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு நிறுவனங்களுக்கான கார்ப்பரேட் வரி 40 சதவீதத்திலிருந்து 35 சதவீதமாகக் குறைக்கப்படுகிறது.
இணைய வர்த்தகத்துக்கான டிடிஎஸ் 1 சதவீதத்திலிருந்து 0.1 சதவீதமாகக் குறைக்கப்படுகிறது. டிடிஎஸ் தாக்கல் தாமதமானால், அது குற்றமாகக் கருதப்படாது என்று முன்மொழிவு.
செல்போன் உதிரிபாகங்களின் விலை குறைக்கப்படும் என அறிவிப்பு.
தங்கம், வெள்ளி மீதான சுங்க வரி 15 சதவீதத்திலிருந்து 6 சதவீதமாகக் குறைப்பு. பிளாட்டினம் மீதான சுங்க வரி 6.5 சதவீதமாகக் குறைப்பு.
2024-25 நிதியாண்டில் நிதிப் பற்றாக்குறையானது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.9% என மதிப்பிடப்பட்டுள்ளது. இதை 4.5 சதவீதத்துக்குக் கீழ் குறைப்பதே இலக்கு.
தொண்டு நிறுவனங்களுக்கான இரு வரி விலக்கு முறைகளை, ஒன்றாக இணைக்க முன்மொழிவு.
காசி விஸ்வநாதர் கோயில் உலகத் தரத்தில் மேம்படுத்தப்படும்.
வலுவான உள்கட்டமைப்பைக் கட்டமைக்க கணிசமான முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன. மூலதனச் செலவீனமாக, உள்கட்டமைப்பு வளர்ச்சிக்காக ரூ. 11 லட்சம் கோடிக்கும் மேல் ஒதுக்கப்பட்டுள்ளது. இது நம்முடைய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.4%. உள்கட்டமைப்பில் தனியார் துறையின் முதலீடுகள் ஊக்குவிக்கப்படும்.
1 கோடி வீடுகளில் சூரிய மின்சக்தித் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், மாதந்தோறும் 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும். இந்தத் திட்டம் மேலும் ஊக்கப்படுத்தப்படும்.
1 கோடி ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களின் வீட்டுத் தேவைகளுக்காக ரூ.10 லட்சம் கோடி முதலீடு செய்யப்படவுள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் மத்திய அரசின் உதவியாக ரூ. 2.2 லட்சம் கோடி வழங்கப்படவுள்ளது. இதையும் உள்ளடக்கி ரூ. 10 லட்சம் கோடி முதலீடு செய்யப்படவுள்ளது.
வேலை பார்க்கும் பெண்களுக்கு விடுதிகள் அமைக்கப்படும். பெண்களை வேலை பார்ப்பதை ஊக்குவிக்கும் விதமாக விடுதிகள் அமைக்கப்படவுள்ளன.
500 முன்னணி நிறுவனங்களில் 1 கோடி இளைஞர்களுக்குத் தொழில்பயிற்சி வழங்குவதற்கான திட்டம் தொடங்கப்படவுள்ளது. ரூ. 6 ஆயிரம் நிதியுதவியாகவும், மாதந்தோறும் ரூ. 5 ஆயிரம் தொழிற்பயிற்சிக்கான ஊக்கத்தொகையாகவும் வழங்கப்படும்.
மேலும், 12 தொழில் பூங்காக்கள் அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
பிஹாரில் புதிய விமான நிலையங்கள், மருத்துவக் கல்லூரிகள், விளையாட்டு உள்கட்டமைப்புகள் அமைக்கப்படும்.
ஆந்திரப் பிரதேச மறுசீரமைப்புச் சட்டத்தில் உள்ள வாக்குறுதிகளை நிறைவேற்ற எங்களுடைய அரசு முயற்சிகளைச் செய்துள்ளது. ஆந்திரப் பிரதேசத்தின் மூலதனத் தேவையை உணர்ந்து, பல்வேறு அமைப்புகள் மூலம் சிறப்பு நிதியுதவியை வழங்கவுள்ளோம். நடப்பு நிதியாண்டில் ரூ. 15 ஆயிரம் கோடி வழங்கப்படும். வரும் ஆண்டுகளில் கூடுதல் நிதி வழங்க ஏற்பாடுகள் செய்யப்படும்.
பிஹாரில் புதிய சாலைத் திட்டங்கள், புதிய பாலங்கள் அமைக்க ரூ. 26 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு.
முதன்முறையாக வேலைக்குச் சேர்பவர்களுக்கு ஊக்கத்தொகையாக ஒரு மாதம் ஊதியம் வழங்கப்படும்.
வருங்கால வைப்பு நிதி அமைப்பில் புதிதாக இணைபவர்களுக்கு ரூ. 15 ஆயிரம் வழங்கப்படும். மாதம் ரூ. 1 லட்சம் வரை ஊதியம் பெறுபவர்களுக்கு இந்தத் திட்டம் பொருந்தும்.
இதன்மூலம், 210 லட்ச இளைஞர்கள் பயன்பெறுவார்கள்.
அடுத்த 2 ஆண்டுகளில் ஒரு கோடி விவசாயிகள் இயற்கை விவசாயத்தில் ஈடுபடுத்தப்படுவார்கள்
சர்வதேச பொருளாதாரத்தில் நிச்சயமற்ற தன்மை உள்ளபோதிலும் இந்தியாவின் வளர்ச்சி பிரகாசமாக உள்ளது. இந்தியப் பொருளாதாரம் தொடர்ந்து வளர்ச்சி காண்கிறது. வரும் ஆண்டுகளிலும் இது நீடிக்கவுள்ளது. நாட்டின் பணவீக்கம் குறைவாகவே உள்ளது. 4% இலக்கை நோக்கி நிலையாக நகர்ந்து வருகிறது.
இடைக்கால நிதிநிலை அறிக்கையில் குறிப்பிட்டதைப்போல ஏழைகள், பெண்கள், இளைஞர்கள் மற்றும் விவசாயிகள் ஆகியோர் மீது கவனம் செலுத்த வேண்டியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு தொடர்ந்து மூன்றாவது முறையாக அமைந்தவுடன் தாக்கல் செய்யப்படும் முதல் நிதிநிலை அறிக்கை.
தொடர்ந்து 6 முறை மத்திய நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்த மொரார்ஜி தேசாய் சாதனையை முறியடித்து தொடர்ந்து, 7-வது முறையாக நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன்.
நாடாளுமன்றத்தில் இன்னும் சற்று நேரத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள மத்திய நிதிநிலை அறிக்கைக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
தொடர்ந்து 7-வது முறையாக நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவைச் சந்தித்தார். குடியரசுத் தலைவர், நிர்மலா சீதாராமனுக்கு தயிர் மற்றும் சர்க்கரை கொடுத்தார்.