
ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை இன்று (டிச.12) ஒப்புதல் வழங்கியுள்ளது.
1952 முதல் 1967 வரை மக்களவைக்கும், மாநில சட்டப்பேரவைகளுக்கும் ஓரே நேரத்தில் தேர்தல்கள் நடைபெற்று வந்தன. அதன்பிறகு, சில மாநில அரசுகள் கலைக்கப்பட்டது, புதிய மாநிலங்கள் உருவானது உள்ளிட்ட காரணங்களால் மக்களவைக்கும், பல்வேறு மாநில சட்டப்பேரவைகளுக்கும் வெவ்வேறு நேரத்தில் தேர்தல் நடத்தவேண்டிய சூழல் உருவானது.
இந்நிலையில், மீண்டும் மக்களவைக்கும், மாநில சட்டப்பேரவைகளுக்கும் ஓரே நேரத்தில் தேர்தல்கள் நடைபெறுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்ந்து மத்திய அரசுக்கு அறிக்கை வழங்க, முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டது.
இந்தக் குழுவின் அறிக்கை கடந்த மார்ச் மாதத்தில் மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, தலைநகர் தில்லியில் இன்று கூடிய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, ஒரே நாடு ஒரே தேர்தல் சட்டமசோதாவுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.
2029 மக்களவை தேர்தலுடன் சேர்த்து ஒரே நேரத்தில் அனைத்து மாநில சட்டப்பேரவைகள் மட்டுமல்லாமல், உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தல் நடத்தும் வகையில் இந்த மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய அமைச்சரவை மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், நடப்பு நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின்போது இந்த மசோதா தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.