ஆந்திர மாநில தலைநகருக்கு புதிய ரயில் வழித்தடம் அமைக்கும் திட்டத்துக்கு ரூ. 2,245 கோடி ஒதுக்கி ஒப்புதல் அளித்துள்ளது பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை.
இன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டம் தில்லியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், ஆந்திர மாநிலத்தின் தலைநகர் அமராவதிக்கு புதிய ரயில் வழித்தடம் அமைக்கும் ரூ. 2,245 கோடி மதிப்பிலான திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்த திட்டத்தின் மூலம் சென்னை, ஹைதராபாத், கொல்கத்தா போன்ற இந்திய நகரங்களுடன் ரயில் மார்க்கமாக அமராவதி இணைக்கப்படவுள்ளது. இதற்காக விஜயவாடா-ஹைதராபாத் ரயில் பாதையில் உள்ள யெருபாலேமை, விஜயவாடா-குண்டூர் ரயில் பாதையில் உள்ள நம்பூருவுடன் இணைக்கும் வகையில் 57 கி.மீ. தூரத்துக்கு தண்டவாளம் அமைக்கப்படவுள்ளது.
ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலம் கடந்த 2014-ல் ஆந்திரா மற்றும் தெலங்கானா என இரு மாநிலங்களாக மறுசீரமைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நடந்த சட்டப்பேரவைப் பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று ஆந்திர மாநில முதல்வராகப் பதவியேற்ற சந்திரபாபு நாயுடு, ஆந்திர மாநிலத்தின் புதிய தலைநகராக கிருஷ்ணா நதிக்கரையில் அமைந்திருக்கும் அமராவதியை அறிவித்தார்.
அதன்பிறகு அமராவதிக்கு புதிய ரயில் வழித்தடத்தைக் கோரி ஆந்திர அரசின் முன்மொழிந்த திட்டத்துக்கு, ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்தது. ஆனால் 2019-ல் அமைந்த ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஆந்திர அரசு இந்த திட்டத்தில் ஆர்வம் காட்டாததால் இது கிடப்பில் போடப்பட்டது.