
மத்திய நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் நாளை (சனிக்கிழமை) தாக்கல் செய்கிறார். நிர்மலா சீதாராமன் தொடர்ச்சியாகத் தாக்கல் செய்யும் 8-வது நிதிநிலை அறிக்கை இது.
முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் 1959 - 1964 காலகட்டத்தில் மத்திய நிதியமைச்சராக இருந்தபோது 6 முறை நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளார். 1967-1969 காலகட்டத்தில் நிதியமைச்சராக இருந்தபோது 4 முறை நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளார்.
மத்திய நிதிநிலை அறிக்கையை 10 முறை தாக்கல் செய்ததன் மூலம், அதிகமுறை நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்த நிதியமைச்சர் என்ற பெருமை மொரார்ஜி தேசாய் வசம் உள்ளது. முன்னாள் மத்திய நிதியமைச்சர்கள் ப. சிதம்பரம் மற்றும் பிரணாப் முகர்ஜி முறையே 9 மற்றும் 8 முறை நிதிநிலை அறிக்கையத் தாக்கல் செய்துள்ளார்கள்.
எனினும், நிதிநிலை அறிக்கையை அதிகமுறை தொடர்ச்சியாகத் தாக்கல் செய்யும் நிதியமைச்சர் என்ற சாதனை நிர்மலா சீதாராமன் வசமே உள்ளது. இதில் கடந்தாண்டு பிப்ரவரியில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால நிதிநிலை அறிக்கையும் அடக்கம்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவையில் நிர்மலா சீதாராமன் கடந்த 2019-ல் முதன்முறையாக நாட்டின் முதல் முழுநேர பெண் நிதியமைச்சராக நியமிக்கப்பட்டார். 2024-ல் பிரதமர் மோடி தலைமையிலான அரசு ஆட்சியைத் தக்கவைத்தபோது, நிர்மலா சீதாராமனும் தனது இலாகாவைத் தக்கவைத்தார்.
மத்திய நிதிநிலை அறிக்கை பற்றி அறிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்
முதல் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்த தமிழர்
சுதந்திர இந்தியாவின் முதல் நிதிநிலை அறிக்கை நவம்பர் 26, 1947-ல் தாக்கல் செய்யப்பட்டது. இதைத் தாக்கல் செய்தது நாட்டின் முதல் நிதியமைச்சர் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆர்கே ஷண்முகம் செட்டி.
நிதிநிலை அறிக்கை - நீண்ட உரை
மத்திய நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்து நீண்ட நேரம் உரையாற்றிய நிதியமைச்சர் என்ற சாதனையைப் படைத்தவர் நிர்மலா சீதாராமன். பிப்ரவரி 1, 2020-ல் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்தபோது, 2 மணி நேரம் 40 நிமிடங்கள் உரையாற்றினார். இரு பக்கங்கள் மீதமிருந்த நிலையில், தனது உரையை அவர் முன்கூட்டியே நிறைவு செய்தது நினைவில் கொள்ள வேண்டியது.
நிதிநிலை அறிக்கை - குறைவான நேரம் கொண்ட உரை
1977-ல் மத்திய நிதியமைச்சராக இருந்த ஹிருபாய் முல்ஜிபாய் படேல் வெறும் 800 வார்த்தைகளைக் கொண்ட உரையை நிகழ்த்தினார். இதுவரையிலான நிதிநிலை அறிக்கை தாக்கலில் மிகக் குறைவான நேரத்தை எடுத்துக்கொண்ட உரை இது தான்.
நிதிநிலை அறிக்கை தாக்கல் நேரம்
மத்திய நிதிநிலை அறிக்கை பிப்ரவரி மாதம் கடைசி நாளன்று மாலை 5 மணிக்குத் தாக்கல் செய்யப்படுவது வழக்கம். 1999-ல் பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான அமைச்சரவையில் யஷ்வந்த் சின்ஹா நிதியமைச்சராக இருந்தபோது, இந்த வழக்கம் மாற்றப்பட்டது. மாலை 5 மணிக்குப் பதில் காலை 11 மணிக்கு நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்தார் யஷ்வந்த் சின்ஹா. அன்று முதல் காலை 11 மணிக்கு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.
நேரம் மாற்றப்பட்டாலும், நிதிநிலை அறிக்கை பிப்ரவரி இறுதியில் தாக்கல் செய்யப்பட்டு வந்த வழக்கம் மாற்றம் செய்யப்படாமல் இருந்தது. 2017-ல் இந்த வழக்கமும் முடிவுக்கு வந்தது.
மத்திய நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகு, நாடாளுமன்ற ஒப்புதல் நடைமுறைக்கு 2 - 3 மாதங்கள் ஆவது வழக்கம். பிப்ரவரி 29 அன்று நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுவதன் மூலம், அதை மே/ஜூன் மாதங்களுக்கு முன்பு அமல்படுத்த முடியாத நிலை நீடித்து வந்தது.
இதன் காரணமாக, 2017 முதல் பிப்ரவரி 1 அன்று நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. மார்ச் இறுதிக்குள் நாடாளுமன்ற ஒப்புதலுக்கான நடைமுறை நிறைவடைந்து, நிதியாண்டின் தொடக்கமான ஏப்ரல் 1 முதல் நிதிநிலை அறிக்கையை அமல்படுத்தும் வகையில் இந்த மாற்றம் கொண்டுவரப்பட்டது.