
உத்தரகண்டில் இன்று (ஜன.27) முதல் பொது சிவில் சட்டம் அமலுக்கு வருவதாக அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி அறிவித்துள்ளார்.
இந்தியாவில் குற்றவியல் சட்டங்களும், தண்டனைச் சட்டங்களும் மத வேறுபாடின்றி அனைத்து குடிமக்களுக்கும் பொதுவானதாக உள்ளன. ஆனால் திருமணம், விவாகரத்து, தத்தெடுப்பு, சொத்துரிமை போன்ற உரிமையியல் சம்மந்தமான விஷயங்களில், சட்டப்படி பல்வேறு மதத்தினருக்கும் இடையே வேறுபாடுகள் உள்ளன.
உதாரணத்திற்கு ஹிந்துக்கள், பௌத்தர்கள், சமணர்கள் மற்றும் சீக்கியர்களின் திருமணங்களுக்கான அங்கீகாரத்தை ஹிந்து திருமணச் சட்டம் வழங்குகிறது. அதேபோல கிருஸ்துவர்களுக்கு இடையிலான திருமணத்தை இந்திய கிருஸ்துவ திருமண சட்டமும், இஸ்லாமியர்களுக்கு இடையிலான திருமணத்தை முஸ்லிம் தனிநபர் சட்டமும் நிர்வகிக்கின்றன.
வெவ்வேறு மதத்தினருக்கு இடையே சட்டப்படி நிலவும் இந்த வேறுபாடுகளைக் களையும் வகையில், அனைத்து குடிமக்களுக்குமான ஒரே உரிமையியல் சட்டம், `பொது சிவில் சட்டம்’ என்று அழைக்கப்படுகிறது.
தற்போது இந்தியாவில் பொது சிவில் சட்டம் அமலில் இருக்கும் ஒரே மாநிலமாக உள்ளது கோவா. கோவாவில் போர்த்துகீஸியர்களின் காலனி ஆட்சிகாலத்தின்போது 1867-ல் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்பட்டது. 1961-ல் கோவா இந்தியாவுடன் இணைக்கப்பட்டபோது, இந்த பொது சிவில் சட்டத்தை தக்க வைத்துக்கொள்ள ஒப்புதல் வழங்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த 2022-ல் உத்தரகண்ட மாநில சட்டப்பேரவைத் தேர்தலின்போது, மீண்டும் பாஜக ஆட்சி அமைந்தால் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது. தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் பாஜக வெற்றி பெற்றதை அடுத்து, மீண்டும் அம்மாநில முதல்வராகப் பொறுப்பேற்றுக்கொண்டார் புஷ்கர் சிங் தாமி.
இதைத் தொடர்ந்து, கடந்தாண்டு பிப்ரவரி 6-ல் அம்மாநிலத்துக்கான பொது சிவில் சட்டமுன்வரைவு மசோதா உத்தரகண்ட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, பிப்ரவரி 7-ல் மசோதாவுக்கான ஒப்புதலை சட்டப்பேரவை வழங்கியதும், உத்தரகண்ட் ஆளுநரால் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு மசோதா அனுப்பி வைக்கப்பட்டது.
மார்ச் 13-ல் குடியரசுத் தலைவர் அதற்கான ஒப்புதலை வழங்கினார். இந்நிலையில், இன்று (ஜன.27) முதல் உத்தரகண்டில் பொது சிவில் சட்டம் அமலாவதாக முதல்வர் புஷ்கர் சிங் தாமி அறிவித்துள்ளார். இதனால், பொது சிவில் சட்டம் நடைமுறைக்கு வரும் 2-வது இந்திய மாநிலம் என்கிற பெருமையைப் பெறுகிறது உத்தரகண்ட்.