
வரும் ஏப்ரல் 1 முதல், மத்திய அரசு ஊழியர்களுக்கான ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் அமலுக்கு வரும் என மத்திய நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கான புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கு (யுபிஎஸ்), பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கடந்தாண்டு ஆக.24-ல் ஒப்புதல் வழங்கியது. இந்நிலையில், இது தொடர்பாக மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது,
`மத்திய அரசு ஊழியர்களுக்காக அறிவிக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் வரும் ஏப்ரல் 1 முதல் செயல்பாட்டிற்கு வரும்.
இந்த திட்டத்தின்படி, குறைந்தது 25 ஆண்டுகள் மத்திய அரசில் பணியாற்றியவர்களுக்கு, ஓய்வுக்கு முன்பாகப் பெற்ற 12 மாத அடிப்படை சம்பளத்தின் சராசரியில் 50 சதவீதம் மாத ஓய்வூதியமாக வழங்கப்படும் என உறுதியளிக்கப்படுகிறது.
தேசிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் உள்ள மத்திய அரசு ஊழியர்கள், இந்த ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை தேர்வுசெய்து கொள்ள வாய்ப்பு வழங்கப்படும். பணியில் இருந்து நிரந்தர நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு இந்த ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் பொருந்தாது.
ஓய்வூதியம் பெறுபவர் இறந்தால் அவரது இறப்பிற்கு முன்பாகப் பெறப்பட்ட ஓய்வூதியத்தில் 60 சதவீதம் வாழ்க்கைத் துணைக்கு குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும்.
ஒருவேளை நிர்ணயிக்கப்பட்ட பணிக்காலத்தை (25 ஆண்டுகள்) விட பணிக்காலம் குறைவாக இருந்தால், விகிதாச்சார அடிப்படையில் ஓய்வூதியம் வழங்கப்படும். 10 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் பணி செய்து ஓய்வு பெற்றிருந்தால் குறைந்தது ரூ. 10 ஆயிரம் ஓய்வூதியமாக வழங்கப்படும்.
மேலும், ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை தேர்வு செய்த ஊழியர் 25 ஆண்டுகள் பணி நிறைவுக்குப் பிறகு எப்போது ஓய்வு பெற்றாலும், விதிகளின்படி சட்டப்பூர்வ ஓய்வு வயதை (60) எட்டிய பிறகே, சம்மந்தப்பட்ட நபருக்கு ஓய்வூதியம் வழங்கப்படும்’ என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.