சாம் பித்ரோடா கருத்துக்கும், கட்சிக்கும் தொடர்பில்லை: காங்கிரஸ்

ஏற்கெனவே, வாரிசுரிமை வரி குறித்து சாம் பித்ரோடா பேசியது சர்ச்சையானது.
சாம் பித்ரோடா கருத்துக்கும், கட்சிக்கும் தொடர்பில்லை: காங்கிரஸ்

அயலக காங்கிரஸ் தலைவர் சாம் பித்ரோடா இந்திய மக்களை நிறத்தின் அடிப்படையில் ஒப்பிட்டுப் பேசியது துரதிருஷ்டவசமானது என காங்கிரஸ் விளக்கமளித்துள்ளது.

தி ஸ்டேட்ஸ்மேனுக்கு அளித்த பேட்டியில் இந்தியாவின் பன்முகத்தன்மை குறித்து விளக்கமளித்த சாம் பித்ரோடா இந்திய மக்களை நிறத்தின் அடிப்படையில் ஒப்பிட்டுப் பேசினார்.

"மக்கள் ஒன்றாக வாழக்கூடிய மகிழ்ச்சியான சூழலில் 75 ஆண்டுகளாக நாங்கள் வாழ்ந்து வருகிறோம். அங்கும், இங்கும் நடக்கும் சில சண்டைகளை விட்டுவிடுவோம். பலதரப்பட்ட இந்தியாவை ஒரு நாடாக ஒன்றிணைத்து வைத்திருக்க முடியும். அங்கு கிழக்கில் இருப்பவர்கள் சீனர்களைப்போல இருப்பார்கள், மேற்கில் உள்ளவர்கள் அரேபியர்களைப் போல இருப்பார்கள். வடக்கில் உள்ளவர்கள் வெள்ளையர்களைப்போல இருப்பார்கள். தெற்கில் உள்ளவர்கள் ஆப்பிரிக்கர்களைப்போல இருப்பார்கள்.

இந்திய மக்கள் வெவ்வேறு மொழிகள், மதம், உணவுக்கு மதிப்பளிக்கக் கூடியவர்கள். அந்த இந்தியாவில்தான் நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம். அங்கு அனைவருக்கும் இடம் உண்டு. அனைவரும் சற்று சமரசமும் செய்து கொள்கிறார்கள்" என்றார் பித்ரோடா.

இவருடைய கருத்தை பாஜகவினர் விமர்சித்து வருகின்றனர்.

இந்த நிலையில், சாம் பித்ரோடாவின் கருத்துக்கும், கட்சிக்கும் தொடர்பில்லை என காங்கிரஸ் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

"போட்காஸ்ட் ஒன்றில் இந்தியாவின் பன்முகத்தன்மையை விளக்குவதற்காக சாம் பித்ரோடா செய்த ஒப்பீடுகள் மிகவும் துரதிருஷ்டவசமானவை மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதவை. இந்தக் கருத்துக்கும் காங்கிரஸுக்கும் தொடர்பில்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கெனவே, வாரிசுரிமை வரி குறித்து சாம் பித்ரோடா பேசியது சர்ச்சையானது. அப்போதும், வாரிசுரிமை வரி குறித்த பித்ரோடாவின் கருத்து காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு கிடையாது என்று விளக்கமளிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in