இந்தியாவில் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை: முதல்வர் மு.க. ஸ்டாலின்

"மக்கள் அளிக்கும் வாக்கு மட்டும்தான் பாஜகவின் பாசிச ஆட்சிக்கு முடிவுரை எழுத முடியும். பாசிச பாஜகவை வீழ்த்த மக்கள் தயாராகி விட்டார்கள்."
முதல்வர் மு.க. ஸ்டாலின்
முதல்வர் மு.க. ஸ்டாலின்ANI

இந்தியாவில் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை இருப்பதாக திமுக தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தில்லி மதுபானக் கொள்கை பணமோசடி வழக்கில் தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். இவரது கைது நடவடிக்கையைக் கண்டித்து தில்லி ராம்லீலா மைதானத்தில் இண்டியா கூட்டணிக் கட்சிகள் சார்பில் மாபெரும் பேரணி நடைபெற்று வருகிறது.

திமுக சார்பில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்துகொள்ள முடியாததால், அவருக்குப் பதில் நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா கலந்துகொண்டு 'இந்தியாவில் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை' என்ற தலைப்பைக் கொண்ட முதல்வரின் உரையை வாசித்தார்.

திமுக தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலினின் உரை:

"தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைதுக்கு எனது கடுமையான கண்டனங்கள். பாஜக அரசு தனது ஏவல் படைகளான சிபிஐ, வருமான வரித் துறை, அமலாக்கத் துறை ஆகியவற்றைப் பயன்படுத்தி எங்களை மிரட்டுகிறார்கள். இதில் மிரண்டு பாஜகவில் ஐக்கியம் ஆகிறவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. வழக்குகளே திரும்பப் பெறப்படும்.

ஆனால், பாஜகவின் ஆணவத்துக்கு அடங்காதவர்களாக இருந்தால், அவர்களைக் கைது செய்து சிறையில் அடைப்பார்கள். இது இந்தியாவில் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலவுவதைப் போல இருக்கிறது.

இதுபோன்ற கைதுகள், இண்டியா கூட்டணியை வலிமையாக ஆக்கியதே தவிர, பலவீனப்படுத்தவில்லை. தாக்குதல் அதிகமாக அதிகமாகக் கூட்டணியும், கூட்டணித் தலைவர்களும் வலிமை அடைகிறார்கள். தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் ஆகியோரைக் கைது செய்திருப்பது பாஜகவின் தோல்வி பயத்தின் வெளிப்பாடே ஆகும். இந்தச் சூழலில் ஆம் ஆத்மி கட்சிக்குத் திமுக உறுதியாகத் துணை நிற்கிறது.

இண்டியா கூட்டணியின் ஒற்றுமையால் மட்டுமே மோடியை வீழ்த்த முடியும் என்பதை மறந்துவிட வேண்டாம். மக்கள் அளிக்கும் வாக்கு மட்டும்தான் பாஜகவின் பாசிச ஆட்சிக்கு முடிவுரை எழுத முடியும். பாசிச பாஜகவை வீழ்த்த மக்கள் தயாராகி விட்டார்கள். பாசிச பாஜகவை வீழ்த்துவோம், கூட்டாட்சி இந்தியாவை உருவாக்குவோம்."

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in