
ஏர் இந்தியா (AI 171) விமான விபத்தில் உயிரிழந்த இங்கிலாந்து நாட்டவர்களின் குடும்பத்தினர், இழப்பீட்டை அதிகரிப்பது தொடர்பாக ஏர் இந்தியா விமான நிறுவனம் மற்றும் சம்மந்தப்பட்ட விமானத்தின் தயாரிப்பு நிறுவனமான போயிங்கிற்கு எதிராக, இங்கிலாந்து நீதிமன்றங்களில் சட்ட நடவடிக்கை மேற்கொள்வது குறித்து பரிசீலித்து வருவதாக, இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த மாதம் ஜூன் 12-ல், குஜராத் மாநிலம் அஹமதாபாத் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட, ஏர் இந்தியாவிற்கு சொந்தமான போயிங் 787 ட்ரீம்லைனர் ரக விமானம் புறப்பட்ட சில வினாடிகளிலேயே அருகில் இருந்து மருத்துவக் கல்லூரி வளாக கட்டடம் மீது மோதியது.
இதில் விமானத்தில் பயணம் செய்த ஒருவரைத் தவிர விமானிகள், பணியாளர்கள், பயணிகள் என 242 பேர் உயிரிழந்தனர். மிகவும் குறிப்பாக, விமானத்தில் உயிரிழந்த பயணிகளில் 52 பேர் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர்கள்.
ஏர் இந்தியா மற்றும் போயிங் நிறுவனங்களுக்கு எதிராக வழக்குத் தொடர, இந்த விபத்தில் உயிரிழந்த இங்கிலாந்து நாட்டவர்களின் குடும்பத்தினர் பிரபல சட்ட நிறுவனமான கீஸ்டோன் லாவுடன் ஆலோசனை மேற்கொண்டு வருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தகவல் தெரிவிப்பதாக இந்தியா டுடே வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இந்த ஆலோசனை இழப்பீடு அதிகரிப்பு குறித்து வழக்கு தொடர்வது தொடர்பானதாக இருக்கலாம் என்றும் தகவல் தெரிவிக்கப்படுகிறது.
ஏர் இந்தியா உரிமையாளரான டாடா குழுமம் முதலில் தலா ரூ. 1 கோடி இழப்பீடு அறிவித்திருந்தது. பின்னர் உடனடி நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பங்களுக்கும் தலா ரூ. 25 லட்சம் கூடுதலாக இழப்பீடு வழங்குவதாக அறிவித்தது.
இந்த வார இறுதியில் ஆலோசனை நிறைவடைந்த பிறகு, சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்த இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.