
கடந்த ஜூன் மாதம் நடந்த யுஜிசி நெட் தேர்வு முறைகேடு புகார்களால் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் நெட் மறுதேர்வுக்கான கால அட்டவணையை தேசிய தேர்வு முகமை இன்று (ஆகஸ்ட் 2) வெளியிட்டுள்ளது.
தேசிய தேர்வு முகமை சார்பில் நெட் தேர்வு ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மற்றும் டிசம்பர் என இரண்டு முறை நடத்தப்படும். பி.எச்.டி படிப்புகளுக்கான சேர்க்கைக்கும், இளநிலை ஆராய்ச்சி படிப்புக்கான மத்திய அரசின் உதவித்தொகையைப் பெறுவதற்கும், பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியராக பணிபுரியவும், நெட் தேர்வில் தேர்ச்சி பெறுவது அவசியம்.
கடந்த ஜூன் 19-ல் நடப்பாண்டுக்கான நெட் தேர்வு நாடு முழுவதும் 1,205 மையங்களில் நடத்தப்பட்டது. நெட் தேர்வில் முறைகேடு நடந்திருக்கலாம் என்று மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் `இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையம்’ அளித்த தகவலை அடுத்து மத்திய கல்வி அமைச்சகம் நெட் தேர்வை ரத்து செய்தது.
இந்நிலையில் நெட் மறுதேர்வு ஆகஸ்ட் 21 முதல் செப்டம்பர் 4 வரை கணினி வழியில் நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தமுள்ள 83 பாடங்களுக்கு எந்தெந்த நாட்களில் தேர்வு நடத்தப்படும் என்ற விரிவான விவரங்கள் ugcnet.nta.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
தேர்வு மையம், ஹால் டிக்கெட் போன்ற விவரங்கள் http://www.nta.ac.in/ வலைத்தளத்தில் விரைவில் வெளியிடப்படும் என்று அறிவித்துள்ளது தேசிய தேர்வு முகமை.