
உச்ச நீதிமன்ற உத்தரவை அடுத்து நகரங்கள், தேர்வு மையங்கள் வாரியாக நீட் தேர்வு முடிவுகளை வெளியிட்டது தேசிய தேர்வு முகமை. exams.nta.ac.in இணையதளத்தில் இளநிலை நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் கடந்த மே 5-ல் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து ஜூன் 4-ல் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த முறை 67 தேர்வர்கள் முதல் இடம் பிடித்தனர். முதல் இடம் பிடித்தவர்களில் 6 தேர்வர்கள் ஹரியானா மாநிலத்தின் ஒரே மையத்தில் தேர்வெழுதிய தகவல் வெளியாகி சர்ச்சை கிளம்பியது.
மேலும் தேர்வுக்கு முன்பே சில இடங்களில் பணம் பெற்றுக்கொண்டு நீட் தேர்வு வினாத்தாள் கசியவிடப்பட்டது என்ற குற்றச்சாட்டு கிளம்பியது. இதை அடுத்து இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அது போக நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பாக வழக்கு பதிந்து, இந்தக் குற்றத்தில் ஈடுபட்ட பலரையும் கைது செய்து விசாரித்து வருகிறது சிபிஐ.
இந்நிலையில் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பான வழக்குகளை விசாரித்து வரும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, இந்த வழக்கு விசாரணையின்போது தேசிய தேர்வு முகமைக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பியது. மேலும் ஜூலை 20-க்குள் நகரங்கள், தேர்வு மையங்கள் வாரியாக நீட் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை வெளியிட உத்தரவிட்டிருந்தது உச்ச நீதிமன்றம்.
இதை அடுத்து மாணவர்களின் விவரங்கள் மறைக்கப்பட்டு, நகரங்கள், தேர்வு மையங்கள் வாரியாக நீட் தேர்வு முடிவுகளை முழுமையாக வெளியிட்டுள்ளது தேசிய தேர்வு முகமை.