சனாதனம் பற்றி உதயநிதி பேசியது தவறு: தெலங்கானா முதல்வர்

"தனது கருத்துக்கு உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்க வேண்டும்."
தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி (கோப்புப்படம்)
தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி (கோப்புப்படம்)ANI

சனாதன தர்மம் குறித்த பேச்சுக்கு உதயநிதி ஸ்டாலின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழ்நாடு உள்பட 21 மாநிலங்களில் 102 தொகுதிகளுக்கு நேற்று நடைபெற்றது. இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 26-ல் நடைபெறுகிறது. மே 7, 13, 20, 25 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் அடுத்தக்கட்ட வாக்குப்பதிவுகள் நடைபெறுகின்றன.

இதனிடையே, தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி டைம்ஸ் நவ் குழுமத்தின் ஆசிரியர் நவிகா குமாருக்கு நேர்காணல் அளித்தார். இதில் உதயநிதி ஸ்டாலினின் சனாதன தர்மம் குறித்த பேச்சுக்கு அவர் எதிர்ப்பு தெரிவித்தார்.

இதுதொடர்பாக நவிகா குமார் எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலளித்ததாவது:

"உதயநிதி ஸ்டாலின் பேசியது தவறு. தெலங்கானா மாநில காங்கிரஸ் தலைவரும், முதல்வருமான நான் சொல்கிறேன், சனாதன தர்மம் குறித்த அவரது கருத்து தவறானது. இதற்கு அவர் பொறுப்பேற்க வேண்டும். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார் ரேவந்த் ரெட்டி.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் கடந்தாண்டு செப்டம்பர் 2-ல் சனாதன ஒழிப்பு மாநாட்டை நடத்தியது. இதில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், டெங்கு, மலேரியாவைப் போல சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்றார். இந்த மாநாட்டில் ஹிந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு பங்கேற்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in