
பொது சிவில் சட்டம் உத்தரகண்ட் மாநில தினமான நவம்பர் 9-க்கு முன் அமல்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளார் அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி.
இந்த ஆண்டு பிப்ரவரி 6-ல் அம்மாநிலத்துக்கான பொது சிவில் சட்டமுன்வரைவு மசோதாவை உத்தரகண்ட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார் முதல்வர் புஷ்கர் சிங் தாமி. அதைத் தொடர்ந்து பிப்ரவரி 7-ல் பொது சிவில் சட்டமுன்வரைவு மசோதாவுக்கு சட்டப்பேரவை ஒப்புதல் வழங்கியது.
உத்தரகண்ட் சட்டப்பேரவை ஒப்புதலுக்குப் பிறகு அம்மாநில ஆளுநர் குர்மீத் சிங், மசோதாவை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தார். மார்ச் 13-ல் மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கினார். இதை அடுத்து உத்தரகண்ட் மாநிலத்தில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தும் வேலைகள் நடந்து வருகின்றன.
இந்தியாவில் குற்றவியல் சட்டங்களும், தண்டனைச் சட்டங்களும் மத வேறுபாடின்றி அனைவருக்கும் பொதுவானதாக உள்ளன. ஆனால் உரிமையியல் சம்மந்தமான விஷயங்கள், அதாவது திருமணம், விவாகரத்து, தத்தெடுப்பு, சொத்துரிமை போன்ற விஷயங்களில் ஒவ்வொரு மதத்தினருக்கும் இடையே வேறுபாடுகள் உள்ளன.
இந்த வேறுபாடுகளைக் களைந்து, எந்த மதத்தவராக இருந்தாலும் அனைவருக்கும் ஒரே மாதிரியான உரிமையியல் சட்டத்தை அமல்படுத்தவே பொது சிவில் சட்டம் கொண்டுவரப்படுகிறது.
தற்போது இந்தியாவில் பொது சிவில் சட்டம் அமலில் இருக்கும் ஒரே மாநிலம் கோவா மட்டுமே. போர்த்துகீஸியர்கள் ஆட்சிகாலத்தில் 1867-ல் கோவாவில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்பட்டது. 1961-ல் கோவா இந்தியாவுடன் இணைக்கப்பட்டபோது அங்கே அமலில் இருந்த பொது சிவில் சட்டத்தை தக்க வைத்துக் கொள்ள ஒப்புதல் வழங்கப்பட்டது.
கோவாவைத் தொடர்ந்து பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த இருக்கும் இரண்டாவது இந்திய மாநிலம் உத்தரகண்ட் ஆகும்.