மேகதாது விவகாரத்தில் இரு மாநில அரசுகளும் பேசித் தீர்வு காண வேண்டும்: மோடி
மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாடும், கர்நாடகமும் அமர்ந்து பேசி சுமூகத் தீர்வை எட்ட வேண்டும் என்று இரு மாநில அரசுகளுக்கும் யோசனை தெரிவித்துள்ளார் பிரதமர் மோடி
கர்நாடகாவின் மேகதாது பகுதியில் காவிரி ஆற்றின் மீது புதிய அணையைக் கட்ட கடந்த சில வருடங்களாக கர்நாடக மாநில அரசு முயற்சி செய்துவருகிறது. பெங்களூரு நகரத்தின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் கர்நாடக அரசு அறிவித்தது.
ஆனால் மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டினால் தமிழகத்துக்கான நீர்வரத்து குறையும், இதனால் தமிழக விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்று தமிழக அரசு மேகதாது அணைத்திட்டத்தைக் கடுமையாக எதிர்த்து வருகிறது. இந்த விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாடு குறித்துப் பொதுத்தளத்தில் கேள்வி எழுப்பப்பட்டது.
இந்நிலையில் மேகதாது அணை விவகாரம் குறித்து தில்லியில் பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசியுள்ளார் கர்நாடகாவின் துணை முதல்வரும், அம்மாநில நீர்வளத்துறை அமைச்சருமான டி.கே. சிவக்குமார். அப்போது அவரிடம் மேகதாது அணை தொடர்பாக இரு மாநில அரசுகளும் அமர்ந்து பேசி தீர்வுகாண வேண்டும் என்று பிரதமர் மோடி யோசனை கூறியுள்ளார்.
இது தொடர்பாக பிரதமரைச் சந்தித்த பிறகு ஊடகங்களிடம் பேட்டி அளித்த டி.கே. சிவக்குமார், `மேகதாது விவகாரத்தில் இரு மாநில அரசுகளும் அமர்ந்து பேசி தீர்வுகாண பிரதமர் மோடி யோசனை தெரிவித்தார். ஆனால் தமிழ்நாடு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இல்லை. காவிரியில் அளவுக்கதிகமான நீர் தமிழ்நாட்டுக்குச் செல்கிறது’ என்றார்.