ஆபரேஷன் அகல்: ஜம்மு காஷ்மீரில் ராணுவ வீரர்கள் வீரமரணம்! | Operation Akhal | Jammu Kashmir | Indian Army

துப்பாக்கிச் சூட்டில் இதுவரை ஐந்துக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
ஆபரேஷன் அகல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள கமாண்டோக்கள்
ஆபரேஷன் அகல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள கமாண்டோக்கள்ANI
1 min read

ஜம்மு காஷ்மீரின் குல்காமில் பயங்கரவாதிகளுடனான மோதலில் இரண்டு ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேநேரம் பயங்கரவாதிகளுக்கு எதிரான ஆபரேசன் அகல் இன்று (ஆக. 9) ஒன்பதாவது நாளை எட்டியுள்ளது.

நேற்று (ஆக. 8) இரவு நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த இருவர் காயமடைந்தனர். இதன் மூலம் பயங்கரவாதிகளுக்கு எதிராக நடைபெறும் ஆபரேஷனில் இதுவரை காயமடைந்த நபர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.

வீரமரணம் அடைந்த வீரர்கள் லான்ஸ் நாயக் பிரித்பால் சிங் மற்றும் சிப்பாய் ஹர்மிந்தர் சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இது தொடர்பாக இந்திய ராணுவத்தின் சினார் கார்ப்ஸ் பிரிவு வெளியிட்ட எக்ஸ் பதிவில் கூறியதாவது,

`நாட்டிற்காக கடமையாற்றிய துணிச்சலான வீரர்களான பிரித்பால் சிங் மற்றும் ஹர்மிந்தர் சிங் ஆகியோரின் உச்சபட்ச தியாகத்தை சினார் கார்ப்ஸ் மதிக்கிறது. அவர்களின் துணிச்சலும் அர்ப்பணிப்பும் என்றென்றும் எங்களுக்கு ஊக்கமளிக்கும்.

இந்திய ராணுவம் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன், துயரமடைந்த குடும்பங்களுடன் துணை நிற்கிறது. ஆபரேஷன் தொடர்கிறது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தெற்கு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் உள்ள அகல் என்ற வனப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த உளவுத்துறை தகவல்களைத் தொடர்ந்து, அந்த பகுதியை ஆகஸ்ட் 1-ம் தேதி பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்து தேடுதலைத் தொடங்கினார்கள்.

இந்த ஆபரேஷனின்போது ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இதுவரை ஐந்துக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். ராணுவ வட்டாரங்கள் அளித்த தகவலின்படி, குறைந்தது மூன்று பயங்கரவாதிகள் அடர்ந்த வனப்பகுதியில் பதுங்கியிருப்பதாக கூறப்படுகிறது.

இயற்கையாக அமைந்துள்ள குகை போன்ற மறைவிடங்களை அவர்கள் பயன்படுத்துகின்றனர். அடர்ந்த வனப் பகுதியில் பயங்கரவாதிகளுடன் ராணுவத்தினர் தொடர்ந்து சண்டையிட்டு வருகின்றனர்.

அடர்ந்த பசுமையான மற்றும் குகைகளுடன் கூடிய கடினமான நிலப்பரப்பு இந்த ராணுவ நடவடிக்கையை சவாலானதாக மாற்றியுள்ளது. வனப்பகுதியில் பதுங்கியுள்ள பயங்கரவாதிகளைக் கண்டறிய டிரோன்கள் மற்றும் ஹெலிகாப்டர்களை பாதுகாப்புப் படையினர் பயன்படுத்தி வருகின்றனர்.

வனப் பகுதியில் மறைந்திருக்கும் பயங்கரவாதிகளை கண்டறிந்து ஒழிக்கும் இந்த நடவடிக்கையில் பாரா கமாண்டோக்கள் இந்திய ராணுவத்திற்கு உதவி வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in