மோடி 3.0: பாஜக நிரப்ப வேண்டிய இரு முக்கியப் பதவிகள்!

மோடி 3.0: பாஜக நிரப்ப வேண்டிய இரு முக்கியப் பதவிகள்!

மக்களவை பொதுத்தேர்தலில் அறுதிப்பெரும்பான்மை கிடைக்காததால் அடுத்துவரும் சட்டமன்றப் பொதுத்தேர்தல்களில் வெற்றி பெறும் நிர்பந்தம் பாஜகவுக்கு ஏற்பட்டுள்ளது.

ஜூன் 4-ல் 18வது மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியானது. மத்தியில் ஆட்சி அமைக்கத் தேவையான அறுதிப்பெரும்பான்மை கிடைக்காததால் கூட்டணிக் கட்சிகளின் உதவியுடன் ஆட்சி அமைத்தது பாஜக.

புதிய மத்திய அமைச்சர்களுக்கு ஜூன் 10-ல் இலாகாக்களை ஒதுக்கி ஆணை பிறப்பித்தார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு. இதனைத் தொடர்ந்து டெல்லியில் உள்ள மத்திய அமைச்சக அலுவலகங்களில் அமைச்சர்கள் அடுத்தடுத்து பொறுப்பேற்று வரும் நிலையில், பாஜக முன் உள்ள இரண்டு சவால்கள் பேசுபொருள் ஆகியுள்ளது.

ஜெ.பி.நட்டா தலைமையில் இந்தப் பொதுத்தேர்தலைச் சந்தித்தது பாஜக. தேர்தலுக்குப் பின் அமைந்த இந்த புதிய அமைச்சரவையில் சுகாதார அமைச்சராக நட்டா பொறுப்பேற்றுள்ளார். பாஜக சார்பில் மத்திய அமைச்சர் பதவியை வகிக்கும் நபர் தேசியத்தலைவர் பதவியை வகிக்க இடமில்லாத்தால், புதிய பாஜக தலைவரை நியமிக்கும் சூழல் உருவாகியுள்ளது.

இந்த வருடத்தின் பிற்பகுதியில் ஜம்மூ-காஷ்மீர், ஹரியானா, ஜார்க்கண்ட், மஹாராஷ்ட்ரா ஆகிய மாநிலங்களில் சட்டமன்றப் பொதுத்தேர்தல் நடைபெற உள்ளதால் விரைவில் தேசியத்தலைவரை நியமிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது பாஜக.

அதிலும் இந்த மக்களவை பொதுத்தேர்தலில் அறுதிப்பெரும்பான்மை கிடைக்காத காரணத்தால் தகுதி வாய்ந்த நபரை தேசியத் தலைவராக நியமித்து நடைபெற இருக்கும் சட்டமன்றப் பொதுத்தேர்தல்களில் வெற்றி பெறும் நிர்பந்தம் பாஜகவுக்கு ஏற்பட்டுள்ளது. எனவே இது தொடர்பான அறிவிப்பு சில நாட்களில் வெளியாகலாம்.

மேலும் புதிய மக்களவை சபாநாயகரைத் தேர்தெடுப்பதிலும் பாஜகவுக்குச் சவாலான காரியமாக இருக்கும்.

மக்களவையில் அறுதிப்பெரும்பான்மை இல்லாத்தால் புதிய சபாநாயகரைத் தேர்தெடுக்கக் கூட்டணி கட்சிகளின் உதவி மீண்டும் பாஜகவுக்குத் தேவைப்படுகிறது. ஆனால் பாஜக கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவும், ஐக்கிய ஜனதாதளம் கட்சித் தலைவர் நிதீஷ் குமாரும் மக்களவை சபாநாயகர் பதவியைத் தங்கள் கட்சிக்குக் கேட்டுவருகின்றனர்.

மக்களவை எம்.பி.க்களை தகுதிநீக்கம் செய்வதிலும், மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை நிறைவேற்றுவதிலும் சபாநாயகருக்கு அதிகாரம் உள்ளது.

வருங்காலத்தில் பாஜகவுடனான கூட்டணியில் பிரச்சனை ஏற்பட்டால் தங்கள் கட்சி எம்.பி.களின் பதவிக்குப் பிரச்சனை வராமல் பார்த்துக்கொள்ள சபாநாயகர் பதவி அவசியம் என்பதால்தான், இந்த பதவியைப் பெற தெலுங்கு தேசம் கட்சியும், ஐக்கிய ஜனதாதளம் கட்சியும் போட்டி போடுகின்றன.

இந்தச் சூழ்நிலையில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்.பி. புரந்தேஸ்வரி மக்களவை சபாநாயகராக நியமிக்கப்படலாம் என உறுதிப்படுத்தப்படாத தகவல் வெளியாகியுள்ளது. என்.டி.ராமாராவின் மகளான புரந்தேஸ்வரி காங்கிரஸ் கூட்டணி அரசில் மத்திய அமைச்சராகப் பணியாற்றியுள்ளார். இவரது தங்கை புவனேஸ்வரி ஆந்திர முதல்வராகப் பதவியேற்க இருக்கும் சந்திரபாபு நாயுடுவின் மனைவியாவார்.

ஒருவேளை சபாநாயகர் பதவியை பாஜக வைத்துக்கொண்டால், துணை சபாநாயகர் பதவி கூட்டணிக் கட்சிகளுக்கு செல்லக்கூடும் என எதிர்பாக்கப்படுகிறது.

logo
Kizhakku News
kizhakkunews.in