ராகுல் காந்தி உள்ளிட்டோர் கைது: விஜய் கண்டனம் | TVK Vijay

தேர்தல் ஆணையம் நோக்கி பேரணி மேற்கொண்டபோது, காவல் துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தார்கள்.
ராகுல் காந்தி உள்ளிட்டோர் கைது: விஜய் கண்டனம் | TVK Vijay
ANI
2 min read

தில்லியில் தலைமைத் தேர்தல் ஆணையம் நோக்கி பேரணி மேற்கொண்ட மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டதற்கு தவெக தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, தேர்தல் ஆணையம் மீது தொடர்ச்சியாகக் குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறார். பாஜகவுடன் இணைந்து வாக்குத் திருட்டில் ஈடுபட்டதாக தேர்தல் ஆணையத்தைச் சாடினார். கடந்த வாரம் செய்தியாளர்களைச் சந்தித்த ராகுல் காந்தி, வாக்குத் திருட்டு குறித்து மக்களிடத்தில் எடுத்துரைத்தார். இண்டியா கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கும் ராகுல் காந்தி இதை தனியாகப் போட்டுக் காண்பித்து விளக்கினார்.

இதுதொடர்பாக கர்நாடகம், மஹாராஷ்டிரம் மற்றும் உத்தரப் பிரதேசம் தலைமைத் தேர்தல் அலுவலர்கள் சார்பில் ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக ராகுல் காந்தி தலைமையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்ற வளாகம் முதல் தலைமைத் தேர்தல் ஆணையம் அலுவலகம் வரை பேரணி மேற்கொண்டார்கள். தில்லி காவல் துறையினர் ராகுல் காந்தி உள்ளிட்டோரைக் கைது செய்தார்கள்.

இந்தக் கைது நடவடிக்கைக்கு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக எக்ஸ் தளப் பக்கத்தில் விஜய் பதிவிட்டுள்ளதாவது:

"சுதந்திரமான மற்றும் நியாயமானத் தேர்தலை வலியுறுத்தியும், பிகார் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் டெல்லியில் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து தலைமைத் தேர்தல் ஆணையம் நோக்கி மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் தலைமையில் ஊர்வலமாகச் சென்ற நாடாளுமன்ற எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டது கடும் கண்டனத்திற்குரியது.

கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற "எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்" புத்தக வெளியீட்டு விழாவில் பேசியபோது, “நம் நாடு முழு வளர்ச்சியை அடைய வேண்டும் என்றால் ஜனநாயகம் காக்கப்பட வேண்டும். அப்படி ஜனநாயகம் காக்கப்பட வேண்டும் என்றால் அரசியலமைப்புச் சட்டம் காக்கப்பட வேண்டும். அதற்கான பொறுப்பும் கடமையும் நம் ஒவ்வொருவரிடமும் இருக்க வேண்டும். ஜனநாயகத்தின் ஆணிவேர் சுதந்திரமான மற்றும் நியாயமானத் தேர்தல்” (Free and Fair Election) என்று அப்பொழுதே ஆணித்தரமாகத் தெரிவித்திருந்தோம். அத்தோடு, தேர்தல் ஆணையர்கள் ஒருமித்த கருத்தோடு தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்றும் கூறியிருந்தோம்.

மேலும், பிகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம் நடைபெற உள்ளதாகத் தகவல் வெளியானதும், அந்த நடைமுறையானது ஜனநாயக உரிமைகளைக் கேள்விக்குறியாக்கும் என்று, தமிழ்நாட்டில் இருந்து தமிழக வெற்றிக் கழகம்தான் முதன்முதலாகக் குரல் எழுப்பியது.

ஏற்கெனவே நாம் கூறியது போல, அனைவருக்கும் நம்பிக்கை ஏற்படும் விதமாக, ஜனநாயகத்தைக் காக்கும் வகையில் சுதந்திரமான மற்றும் நியாயமான முறையில் தேர்தல் (Free and Fair Election) நடைபெறுவது உறுதி செய்யப்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்" என்று விஜய் குறிப்பிட்டுள்ளார்.

TVK Vijay | Rahul Gandhi | Congress | Opposition Leaders | Election Commission | Parliament | Election | Voter List |

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in