
இன்பத்திலும், துன்பத்திலும் பாகிஸ்தானுடன் துணை நிற்போம் என்று துருக்கி அதிபர் எர்டோகன் கருத்து தெரிவித்துள்ள நிலையில், துருக்கியில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஆப்பிள்களுக்கு தடை விதிக்கக்கோரி ஹிமாச்சலப் பிரதேச விவசாயிகள் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளனர்.
கடந்த ஏப்ரல் 22-ல் ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் (பாகிஸ்தானிடம் பயிற்சி பெற்ற) பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட 26 நபர்களின் குடும்பங்களுக்கு நீதி வழங்கப்படும் என்று இந்தியா உறுதியளித்ததைத் தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு ஆதரவளிக்கும் வகையில், துருக்கிய விமானப்படையின் சி -130 விமானமும், அந்நாட்டின் ஒரு போர்க்கப்பலும் பாகிஸ்தானை சென்றடைந்தன.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக, கடந்த மே 7-ல் ஆபரேஷன் சிந்தூரை இந்திய பாதுகாப்புப் படைகள் தொடங்கின. இதற்கு பதிலளிக்கும் விதமாக பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் துருக்கியில் தயாரான டிரோன்கள் ஈடுபடுத்தப்பட்டன. மேலும், குறிப்பாக துருக்கி பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்தவர்கள் பாகிஸ்தானில் இருந்தபடி இந்தியாவுக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
2023-ல் துருக்கியில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் அந்நாட்டிற்கு உதவுவதற்காக ஆபரேஷன் தோஸ்த்தை இந்தியா முன்னெடுத்தது. ஆனால், இந்தியாவுக்கு எதிரான தாக்குதலில் ஈடுபட நூற்றுக்கணக்கான டிரோன்களை வழங்கி பாகிஸ்தானுக்கு துருக்கி நேரடியாக ஆதரவு அளித்துள்ளது.
இதை ஒட்டி, `துருக்கியை நிராகரிப்போம்’ என்ற ஹேஷ்டேக், இந்தியாவில் டிரெண்ட் ஆகி வருகிறது. துருக்கியில் தயாராகும் பொருட்களை நிராகரிக்கவேண்டும் என்று பலரும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும், துருக்கி பல்கலைக்கழகத்துடனான ஒப்பந்தத்தை தில்லி ஜே.என்.யூ. பல்கலைக்கழகம் ரத்து செய்துள்ளது.
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃபுக்கு துருக்கி பிரதமர் எர்டோகான் அண்மையில் அனுப்பியுள்ள செய்தியில், `கடந்த காலத்தைப் போலவே, எதிர்காலத்திலும் நல்ல நேரங்களிலும், கெட்ட நேரங்களிலும் நாங்கள் உங்களுடன் தொடர்ந்து நிற்போம். துருக்கி-பாகிஸ்தான் சகோதரத்துவம் என்பது சிறந்த நட்புக்கான உதாரணமாக உள்ளது’ என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் துருக்கி, ஈரான், ஈராக் மற்றும் சீனா போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஆப்பிள்களுக்கு தடை விதிக்கக்கோரி ஹிமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த விவசாயிகள் மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளனர். குறிப்பாக, கார்ப்பரேட் வேலைகளை விட்டுவிட்டு ஆப்பிள் சாகுபடியில் ஈடுபட்டுள்ள இளம் விவசாயிகள் இந்த கோரிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
ஆண்டுதோறும் துருக்கியிலிருந்து மட்டும் சுமார் 80 லட்சம் ஆப்பிள் பெட்டிகளை இந்தியா இறக்குமதி செய்வதாகவும், ஆப்பிள் வர்த்தகம் உள்பட சுமார் 10 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகம் நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது.