நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது: கௌதம் அதானி

கோப்புப்படம்
கோப்புப்படம்ANI
1 min read

அதானி குழுமத்துக்கு எதிராக வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை செபியே விசாரிக்கும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், நீதி நிலைநாட்டப்பட்டுள்ளதாக அந்தக் குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி தெரிவித்துள்ளார்.

ஓராண்டுக்குமுன், அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் ரிசர்ச் என்ற நிறுவனம், இந்தியாவைச் சேர்ந்த மிகப் பெரிய தொழில் குழுமமான அதானி குழுமத்தின்மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளைச் சுமத்தியது. மிக முக்கியமாக, அதானி நிறுவனத்தின் சொந்தக்காரர்கள் தங்கள் பணத்தையே வெளிநாடுகளுக்கு அனுப்பி, அவற்றைக் கொண்டு தங்கள் நிறுவனப் பங்குகளை வேறு பெயர்களில் வாங்கி, பங்கின் விலைகளை மேலும் கீழுமாக ஏற்றி இறக்கி லாபம் சம்பாதிக்கிறார்கள் என்றது.

இதனால் இந்தியாவில் பெரும் சர்ச்சை வெடித்தது. மத்தியில் ஆளும் பாஜக அரசு, தன் நண்பரான அதானியைக் காப்பாற்றுகிறது என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.

ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியானதும் அதானி நிறுவனப் பங்குகள் கடுமையாக வீழ்ந்தன. ஆனால் ஹிண்டன்பர்க் நிறுவனமே, 'ஷார்ட் செல்லிங்' எனப்படும் முறையில் அதானி நிறுவனப் பங்குகளை விற்று பெரும் லாபம் அடைந்தது.

இந்தியப் பங்குச்சந்தைகளைக் கட்டுப்படுத்தும் நிறுவனமான செபி, அதானி குறித்த புகார்களை விசாரித்துவருகிறது. இந்நிலையில் சிறப்புப் புலனாய்வுக் குழு ஒன்று அமைக்கப்பட்டு அதானி குழுமத்தை விசாரிக்கவேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன. வழக்கும் தொடரப்பட்டது.

இந்நிலையில் உச்ச நீதிமன்றம், ஹிண்டன்பர்க் அறிக்கையின் அடிப்படையில் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கவேண்டிய தேவையில்லை, செபியின் விசாரணையே போதும் என்று தீர்ப்பளித்துள்ளது. மேலும் ஹிண்டன்பர்க் அறிக்கையைப் பயன்படுத்தி இந்தியப் பங்குச்சந்தைகளில் யாரெல்லாம் ஷார்ட் செல்லிங் முறையில் லாபம் அடைந்துள்ளனர் என்பதையும் செபி விசாரிக்கவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியானதைத் தொடர்ந்து, நீதி நிலைநாட்டப்பட்டுள்ளதாக அதானி குழுமத் தலைவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அதானி பதிவிட்டுள்ளதாவது:

"நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது, உண்மையே வெல்லும். எங்களுடன் துணை நின்ற அனைவருக்கும் நன்றி. இந்தியாவின் வளர்ச்சிக்கு எங்களுடைய பங்களிப்பு தொடரும்."

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in