
நவீன் பட்நாயக் அரசியலில் நுழைந்த 5 வருடங்களுக்குப் பிறகு, 2002-ல் பிஜு ஜனதா தளம் கட்சிக்குள் கலகக் குரல்கள் எழுந்தன. அக்கட்சி சார்பில் அன்றைய மக்களவை உறுப்பினர்களாக 10 எம்.பி.க்கள் இருந்தனர். அதில் 6 எம்.பி.க்கள், தங்களை உண்மையான பிஜு ஜனதா தள மக்களவைக் குழுவாக அங்கீகரிக்கக்கோரி அன்றைய சபாநாயகர் மனோஹர் ஜோஷியிடம் மனு அளித்தார்கள்.
முதல்முறையாக அப்போது முதல்வராகி இருந்தாலும், போதிய அரசியல் முதிர்ச்சி இல்லை என்றாலும், இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு நவீன் பட்நாயக் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தார். அதைத் தொடர்ந்து 2004 முதல் கடந்த 2019 வரை நடைபெற்ற 4 சட்டப்பேரவைத் தேர்தல்களிலும், மக்களவைத் தேர்தல்களிலும் வெற்றி பெற்று தன் ஆளுமையை அவர் நிலை நிறுத்தினார்.
இந்நிலையில், 23 வருடங்களுக்குப் பிறகு வக்ஃபு சட்ட திருத்த மசோதாவால் சொந்த கட்சிக்குள் நவீன் பட்நாயக்கிற்கு சிக்கல் எழுந்துள்ளது. வக்ஃபு சட்ட திருத்த மசோதாவிற்கு எதிராக நவீன் பட்நாயக்கும், பிஜு ஜனதா தளம் கட்சியும் பேசி வந்த நிலையில், நாடாளுமன்ற வாக்கெடுப்பிற்கு முன்பு கட்சியின் அதிகாரபூர்வ கொள்கையில் மாற்றம் ஏற்பட்டது.
மாநிலங்களவையில் பிஜு ஜனதா தளத்திற்கு 7 எம்.பி.க்கள் உள்ளார்கள். வக்ஃபு சட்ட திருத்த மசோதா மீதான விவாதம் கடந்த ஏப்ரல் 3 அன்று மாநிலங்களவையில் நடைபெற்றது. வாக்கெடுப்பிற்கு முன்பு, கொறடா உத்தரவு பிறப்பிப்பதில் இருந்து பின்வாங்கிய கட்சித் தலைமை, தங்கள் முடிவின்படி மசோதாவிற்கு வாக்களிக்குமாறு எம்.பி.க்களிடம் கேட்டுக்கொண்டது.
இதன் அடைப்படையில், 3 எம்.பி.க்கள் மசோதாவிற்கு ஆதரவாகவும், 3 எம்.பி.க்கள் மசோதாவிற்கு எதிராகவும் வாக்களித்தார்கள். ஒரு எம்.பி. வாக்கெடுப்பில் பங்கேற்காமல் புறக்கணித்தார். இதைத் தொடர்ந்து, இந்த விவகாரத்தை முன் வைத்து கட்சிக்குள் கலகக் குரல்கள் எழுந்துள்ளன.
குறிப்பாக, இதில் பாஜகவின் தலையீடு இருந்ததாக கட்சியின் மூத்த தலைவர்கள் சிலர் குற்றம்சாட்டியுள்ளார்கள். மேலும், பெயர் குறிப்பிடாமல் நவீன் பட்நாயக்கின் அரசியல் ஆலோசகரான முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி வி.கே. பாண்டியன் மீதும் சில கட்சித் தலைவர்கள் குற்றம்சாட்டியுள்ளார்கள்
இதைத் தொடர்ந்து, எம்.பி. முபிஸுல்லா கான் தலைமையிலான இஸ்லாமியர்கள், கட்சியின் மதச்சார்பின்மை கொள்கையில் சமரசம் செய்யக்கூடாது என்று நவீன் பட்நாயக்கை சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுப்பதாகவும், கட்சியின் மதச்சார்பின்மை கொள்கை எந்தவொரு மாற்றமில்லாமல் தொடரும் எனவும் கட்சியினரிடம் நவீன் பட்நாயக் உறுதியளித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இதனால், நவீன் பட்நாயக்கின் அடுத்தகட்ட நகர்வுகள் கவனம் பெற்றுள்ளன.