
ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக உலகளாவிய பரப்புரையை மேற்கொள்ளவுள்ள அனைத்துக் கட்சிக் குழுவிற்கு, பர்ஹாம்பூர் எம்.பி. யூசுப் பதானுக்கு பதிலாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான அபிஷேக் பானர்ஜியை அக்கட்சி பரிந்துரைத்துள்ளது.
பயங்கரவாதத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட ஆபரேஷன் சிந்தூரின் பின்னணி குறித்து உலக நாடுகளுக்கு தெரியப்படுத்த ஏழு அனைத்துக் கட்சி குழுக்களை மத்திய அரசு அமைத்துள்ளது. இதற்காக கட்சி வேறுபாடுகளைக் கடந்து 51 அரசியல் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்களை மத்திய அரசு தேர்ந்தெடுத்துள்ளது.
அனைத்துக் கட்சி குழுவில் திரிணாமூல் காங்கிரஸ் பிரிதிநிதியாக முன்னாள் கிரிக்கெட் வீரரும், எம்.பி.யுமான யூசுப் பதானை மத்திய அரசு தேர்ந்தெடுத்ததாக முன்பு தகவல் வெளியானது.
இதை ஒட்டி, தங்கள் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு முன்பு, மத்திய அரசு தங்களிடம் கலந்தாலோசிக்கவில்லை என்று கூறி திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மமதா பானர்ஜி அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் எக்ஸ் கணக்கில் வெளியிட்டுள்ள பதிவில்,
`பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் உலகளாவிய பிரச்சாரத்திற்கான அனைத்துக் கட்சிக் குழுவில், திரிணாமுல் காங்கிரஸைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் எங்கள் தலைவர் மம்தா பானர்ஜி தேசியப் பொதுச்செயலாளர் அபிஷேக் பானர்ஜியை பரிந்துரைத்துள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொள்கிறோம்’ என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், `பயங்கரவாத அச்சுறுத்தலை எதிர்கொள்ள உலகம் ஒன்றுபட வேண்டிய நேரத்தில், (குழுவில்) அபிஷேக் பானர்ஜியின் சேர்க்கை நம்பிக்கையையும், தெளிவையும் ஏற்படுத்தும். அவரது இருப்பு பயங்கரவாதத்திற்கு எதிரான (மேற்கு) வங்கத்தின் உறுதியான நிலைப்பாட்டை பிரதிபலிப்பது மட்டுமல்லாமல், உலக அரங்கில் இந்தியாவின் கூட்டுக்குரலையும் வலுப்படுத்தும்’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.