மேற்கு வங்க இடைத்தேர்தல்: 6 தொகுதிகளையும் கைப்பற்றிய திரிணாமூல் காங்கிரஸ்!

அலிப்பூர்துவார் மாவட்டத்தின் மதாரிஹாட் சட்டப்பேரவை தொகுதியில் கடந்த 2 தேர்தல்களிலும் பாஜக வெற்றி பெற்றது.
மேற்கு வங்க இடைத்தேர்தல்: 6 தொகுதிகளையும் கைப்பற்றிய திரிணாமூல் காங்கிரஸ்!
ANI
1 min read

மேற்கு வங்க மாநில இடைத்தேர்தலில் 6 சட்டப்பேரவை தொகுதிகளையும் கைப்பற்றியுள்ளது மமதா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் கட்சி.

மேற்கு வங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸ் மற்றும் பாஜகவைச் சேர்ந்த 6 எம்.எல்.ஏ.க்கள் கடந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு எம்.பி.களாக தேர்வானார். இதை ஒட்டி, அவர்கள் அனைவரும் தங்களது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தனர். இதனால் காலியானதாக அறிவிக்கப்பட்ட 6 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் கடந்த நவ.13-ல் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில், இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை இன்று (நவ.23) காலை 8 மணிக்குத் தொடங்கியது. வாக்கு எண்ணிக்கையில் ஆரம்பம் முதலே அனைத்து சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வந்தது திரிணாமூல் காங்கிரஸ் கட்சி. வாக்கு எண்ணிக்கையின் முடிவில் 6 தொகுதிகளையும் திரிணாமூல் காங்கிரஸ் கைப்பற்றியது.

குறிப்பாக அலிப்பூர்துவார் மாவட்டத்தின் மதாரிஹாட் சட்டப்பேரவை தொகுதியில் கடந்த 2 தேர்தல்களிலும் பாஜக வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்தத் தொகுதியை பாஜகவிடம் இருந்து கைப்பற்றியது மட்டுமின்றி, முதல்முறையாக வெற்றிபெற்றுள்ளது திரிணாமூல் காங்கிரஸ் கட்சி. மேலும் கூச் பெஹார் மாவட்டத்தின் ஷிடாய் தொகுதியில் திரிணாமூல் காங்கிரஸ் வேட்பாளர் சங்கிதா ராய் 1.3 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

இந்த வெற்றி தொடர்பாக ஊடகங்களில் பேசியுள்ள திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர், `ஆர்.ஜி. கர் அரசு மருத்துவமனை பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் ஆளும் அரசு மீது அவதூறு பரப்ப மேற்கொள்ளப்பட்ட முயற்சி இந்தத் தேர்தல் முடிவுகள் மூலம் முறியடிக்கப்பட்டுவிட்டது’ என்றனர்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in