புதிய இரு சக்கர வாகனங்களுடன் இரு தலைக் கவசங்கள் வழங்கவேண்டும்: மத்திய அரசு

தற்போது பயன்பாட்டில் இருக்கும் (தோராயமாக) 40% இரு சக்கர வாகனங்களில் இந்த அம்சம் இடம்பெறவில்லை.
கோப்புப்படம்
கோப்புப்படம்ANI
1 min read

ஜனவரி 2026 முதல் புதிய இரு சக்கர வாகனங்களுடன் இரண்டு தலைக் கவசங்களை வழங்கவேண்டும் என்றும், அனைத்து இரு சக்கர வாகனங்களிலும் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் இடம்பெறவேண்டும் என்றும் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

வரும் ஜனவரி 1, 2026 முதல் இந்தியாவில் விற்கப்படும் ஸ்கூட்டர்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் உள்பட அனைத்து புதிய இரு சக்கர வாகனங்களிலும் (எஞ்சின் அளவைப் பொருட்படுத்தாமல்) `ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் (ABS)’ பொருத்தப்பட்டிருப்பதை கட்டாயமாக்கி மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இந்திய சாலைகளில் காயங்கள் மற்றும் இறப்புகளைக் குறைப்பதற்கான உத்தியின் ஒரு பகுதியாக இந்த புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

தற்போது, ​​125cc-க்கும் அதிகமான எஞ்சின் திறன் கொண்ட இரு சக்கர வாகனங்களுக்கு மட்டுமே ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கட்டாயம் என்ற நிலை உள்ளது. இதனால் தற்போது பயன்பாட்டில் இருக்கும் (தோராயமாக) 40% இரு சக்கர வாகனங்களில் இந்த அம்சம் இடம்பெறவில்லை.

வாகனத்தை ஓட்டும் நபர் திடீரென பிரேக் பிடிக்கும்போது அல்லது பிரேக்குகளை வலுக்கட்டாயமாகப் பயன்படுத்தும்போது, வாகனத்தின் சக்கரங்களின் இயக்கும் நின்றுபோவதை தடுக்க, `ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம்’ உதவுகிறது. இதன் மூலம், ஓட்டுனரின் கட்டுப்பாட்டில் வாகனம் இருக்கும். மேலும், வாகனம் சறுக்குதலுக்கு அல்லது விபத்துக்குள்ளாகும் அபாயங்களும் வெகுவாகக் குறையும்.

மேலும், ஜனவரி 2026 முதல் ஒவ்வொரு புதிய இரு சக்கர வாகனங்களுடனும் இரண்டு தலைக் கவசங்கள் வழங்குவதை கட்டாயமாக்கியும் அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. தற்போது, புதிய இரு சக்கர வாகனங்களுக்கு ​​ஒரு தலைக்கவசம் மட்டுமே வழங்கப்படுகிறது.

இந்த புதிய உத்தரவின் மூலம் வாகனத்தை ஓட்டுபவர் மட்டுமல்லாமல், பின் இருக்கையில் அமர்ந்திருப்பவரின் பாதுகாப்பும் உறுதி செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in