வங்கி அமைப்பில் மாற்றங்கள் நிகழ்ந்தது எப்படி?: ஆர்பிஐ விழாவில் பிரதமர் மோடி பேச்சு
ANI

வங்கி அமைப்பில் மாற்றங்கள் நிகழ்ந்தது எப்படி?: ஆர்பிஐ விழாவில் பிரதமர் மோடி பேச்சு

"இளைஞர்களின் கனவுகளை நனவாக்குவதில் ரிசர்வ் வங்கி முக்கியப் பங்கை வகிக்கவுள்ளது."

அரசாங்கத்தின் முயற்சிகளில் நேர்மையும், நிலைத்தன்மையும் இருந்ததால் வங்கி அமைப்பில் மாற்றங்கள் நிகழ்ந்ததாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

ரிசர்வ் வங்கியின் 90-வது ஆண்டு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றார்கள். கடந்த 10 ஆண்டுகளில் ரிசர்வ் வங்கி சந்தித்த மாற்றங்களை பிரதமர் மோடி பாராட்டி பேசினார்.

"எங்களுடைய முயற்சிகளில் நேர்மையும், நிலைத்தன்மையும் இருந்ததால் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. எங்களுடைய கொள்கைகள், நோக்கங்கள் மற்றும் முடிவுகள் தெளிவாக இருந்ததால் இந்த மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. நோக்கங்கள் தெளிவாக இருந்தால், கொள்கைகள் சரியானதாக இருக்கும். கொள்கைகள் சரியாக இருந்தால், முடிவுகள் சரியானதாக இருக்கும். முடிவுகள் சரியாக இருந்தால், பலன்கள் சரியானதாக அமையும்.

2014-ல் ரிசர்வ் வங்கி 80 ஆண்டுகளை நிறைவு செய்தபோது, அந்த நிகழ்ச்சியில் நான் கலந்துகொண்டேன். அப்போதைய சூழல் முற்றிலும் வேறாக இருந்தது. இந்தியாவில் ஒட்டுமொத்த வங்கித் துறையும் பிரச்னைகள் மற்றும் சவால்களால் தடுமாறி வந்தன.

இந்தியாவிலுள்ள வங்கி அமைப்பின் எதிர்காலம் மற்றும் உறுதித்தன்மை குறித்து அனைவருக்குமே சந்தேகம் இருந்தது. நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பொதுத் துறை வங்கிகளால் உரிய ஊக்கத்தை அளிக்க முடியாத அளவுக்கு நிலைமை மோசமாக இருந்தது. அங்கிருந்து தொடங்கியது இந்தப் பயணம். இன்று நாட்டின் வங்கி அமைப்பு உலகளவில் வலிமையானதாகவும், நிலையானதாகவும் பார்க்கப்படுகிறது.

வங்கித் துறையின் வளர்ச்சிக்காக எந்தவொரு விஷயத்தையும் நாங்கள் விட்டுவைக்கவில்லை. அங்கீகாரம், தீர்மானம், மறுமூலதனம் என்ற கொள்கையுடன் பாஜக அரசு செயல்பட்டது. பொதுத் துறை வங்கிகளின் நிலைமையை மேம்படுத்த, பாஜக அரசு ரூ. 3.5 லட்சம் கோடி மூலதனம் செலுத்தி, சீர்திருத்தங்களையும் மேற்கொண்டது.

யுபிஐ முறை உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட தளமாக மாறியுள்ளது. ஒவ்வொரு மாதமும் 1,200 கோடி பரிமாற்றங்கள் நிகழ்கின்றன. வெறும் 10 ஆண்டுகளில் வங்கித் துறை, பொருளாதாரம் மற்றும் ரூபாய் பரிமாற்றங்களில் புதிய அத்தியாயத்துக்குள் நுழைந்துள்ளோம்.

டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் சாத்தியக்கூறுகள் குறித்து நாம் அதிகம் சிந்திக்க வேண்டும். பணமில்லாப் பொருளாதாரத்துக்கான வழிகளைக் கண்காணித்து, நிதி அம்சங்களை உள்ளடக்கிய கலாசாரத்தை நாம் வளர்க்க வேண்டும்.

அடுத்த 10 ஆண்டுகளுக்கான இலக்கை முடிவு செய்யும்போது, இளைஞர்களின் கனவுகளை மனதில் கொள்ள வேண்டும். இளைஞர்களின் கனவுகளை நனவாக்குவதில் ரிசர்வ் வங்கி முக்கியப் பங்கை வகிக்கவுள்ளது." என்றார் பிரதமர் மோடி.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in