கொல்கத்தாவில் கடந்த 150 வருடங்களாக இயங்கிவரும் டிராம் சேவையை நிறுத்த மேற்குவங்க மாநில அரசு முடிவு செய்துள்ளது.
பிரிட்டிஷ் காலனி ஆட்சியின்போது அன்றைய கல்கத்தா நகரத்தில் 1873-ல் டிராம் சேவை தொடங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அன்றைய மெட்ராஸ், நாசிக், பாம்பே, பாட்னா போன்ற நகரங்களிலும் டிராம் சேவை தொடங்கப்பட்டது. காலப்போக்கில் பிற நகரங்களில் டிராம் சேவை நிறுத்தப்பட்டாலும், இன்றுவரை கொல்கத்தா நகரில் டிராம்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
1873-ல் குதிரைகளால் இழுத்துச் செல்லப்படும் டிராம் வண்டிகளும், அதைத் தொடர்ந்து 1882-ல் நீராவி எஞ்சின்களால் இயங்கும் டிராம் வண்டிகளும் கொல்கத்தாவில் அறிமுகப்படுத்தப்பட்டன. 1900-ல் மின்சாரத்தால் இயங்கும் டிராம்களும், மிக சமீபமாக 2013-ல் குளிர்சாதன வசதிகள் கொண்ட டிராம்களும் செயல்பட்டுக்கு வந்தன.
இந்நிலையில் காலத்துக்கு ஏற்றதுபோல மேம்படுத்தப்பட்டு, கொல்கத்தா நகரத்தின் ஓர் அங்கமாகவும், பாரம்பரிய அடையாளச் சின்னங்களில் ஒன்றாகவும் இருந்து வந்த டிராம் சேவையை நிறுத்துவதாக, அம்மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் ஸ்னேஹாசிஸ் சக்ரவர்த்தி அறிவித்துள்ளார்.
டிராம்களால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஸ்னேஹாசிஸ் சக்ரவர்த்தி தகவல் தெரிவித்துள்ளார். அதே நேரம் மைதான் முதல் எஸ்பிளானேட் வரை மட்டும் தொடர்ந்து டிராம் சேவை இருக்கும் எனவும் அவர் தகவலளித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து, போக்குவரத்து நெரிசலுக்கு டிராம்களை மட்டும் குறை சொல்வது எந்த வகையிலும் ஏற்கத்தக்கது அல்ல, டிராம்களால் மலிவான முறையில் பயணம் மேற்கொள்ள முடிகிறது என கொல்கத்தா நகர மக்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர்.