
ஸ்வாரயில் (SwaRail) என்ற புதிய கைப்பேசி செயலியை ஐஆர்சிடிசி அறிமுகப்படுத்தியுள்ளது. பயணிகள் சேவைகளை நவீனமயமாக்கி, மேம்படுத்துவதற்கான நோக்கத்தின் ஒரு பகுதியாக, இந்த தனித்துவமான செயலி இந்திய ரயில்வேயால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மத்திய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் இயங்கும் `ரயில்வே தகவல் அமைப்புகள் மையம்’, ஆப்பிள் மற்றும் ஆண்ட்ராய்டு கைபேசிகளில் இயங்கும் வகையில் இந்த செயலியை வடிவமைத்துள்ளது.
ஐஆர்சிடிசி செயலியைவிட கூடுதல் வசதிகள் இதில் உள்ளன. பயணங்களை திட்டமிடுதல், பயணிச்சீட்டு முன்பதிவு, பயணச்சீட்டு காத்திருப்பு நிலையை அறிந்துகொள்ளுதல், உணவை ஆர்டர் செய்தல் போன்ற பல விஷயங்களை இந்த ஒரே செயலியின் மூலம் மேற்கொள்ளலாம்.
புதிய செயலியின் அம்சங்கள்:
1) தங்கள் வசம் ஏற்கனவே இருக்கும் `ரயில் கனெக்ட்’ அல்லது `ஐஆர்சிடிசி’ பயனர் ஐடியை உபயோகித்து பயணிகள் இந்த செயலியை உபயோகிக்கலாம். அல்லது வேண்டுமென்றால் புதிய பயனர் ஐடியை உருவாக்கிக்கொள்ளலாம்.
2) ரயிலில் பயணம் மேற்கொள்ளும்போது, இந்த செயலி வழியாக குறிப்பிட்ட விற்பனையாளர்களிடம் இருந்து உணவுகளை ஆர்டர் செய்யலாம்.
3) இந்திய ரயில்வேயிடம் புகார் தெரிவிக்க தற்போது உபயோகிக்கப்படும் `ரயில் மதாத்’ (Rail Madad) அம்சம் இதில் இணைக்கப்பட்டுள்ளது.
4) இந்த செயலியை பல்வேறு இந்திய மொழிகளில் உபயோகப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
5) டிஜிட்டல் வேலட் (R-Wallet) அம்சம் இந்த செயலியுடன் இணைக்கப்பட்டுள்ளது. அதை பயன்படுத்தி பயணச்சீட்டு முன்பதிவுகளுக்குப் பணம் செலுத்தலாம்.
6) ரயில்களின் பயணம் மற்றும் இருப்பு குறித்து இந்த செயலி வழியாகவே கண்காணிக்கலாம். தாமதமாகும் ரயில்களின் வருகை, புறப்பாடு குறித்த தகவல்கள் பயணிகளுக்கு உடனுக்குடன் இதன்மூலம் தெரிவிக்கப்படும்.
7) முன்பதிவில்லா பயணச்சீட்டுகளையும் இந்த செயலியின் மூலம் பெறமுடியும்.
8) ரயில்கள் மூலமாக அனுப்பப்படும் சரக்குகள், பார்சல்கள் குறித்தும் வாடிக்கையாளர்கள் இதில் கண்காணிக்க முடியும்.