
வரலாற்றின் துயரமான அத்தியாயமான தேசப் பிரிவினையின்போது எண்ணற்ற மக்கள் அனுபவித்த வலியை நினைவுகூறுவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
1947-ல் பிரிட்டிஷ் காலனி ஆட்சி முடிவுக்கு வருவதற்கு முன்பு, அன்றைய ஒருங்கிணைந்த இந்தியா இரண்டாகப் பிரிக்கப்பட்டு இந்தியா, பாகிஸ்தான் என இரு நாடுகள் உருவாகின. இந்நிலையில், 1947-ல் தேசப் பிரிவினை நிகழ்ந்த ஆகஸ்ட் 14-ம் தேதியை, பிரிவினை துயரத்தின் நினைவு தினமாக அனுசரிக்கப்படும் என்று கடந்த 2021-ல் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து 2021-ல் தொடங்கி ஒவ்வொரு ஆண்டும் பிரிவினை துயரத்தின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து பிரதமர் மோடி இன்று (ஆக. 14) வெளியிட்ட எக்ஸ் பதிவில் கூறியதாவது,
`நமது வரலாற்றின் அந்த துயரமான அத்தியாயத்தில் எண்ணற்ற மக்கள் அனுபவித்த எழுச்சி மற்றும் வலியை நினைவுகூரும் வகையில், `பிரிவினை கொடூரங்கள் நினைவு தினத்தை’ இந்தியா அனுசரிக்கிறது. அவர்களின் மன உறுதியை... கற்பனை செய்ய முடியாத இழப்பை எதிர்கொள்ளும் திறனையும், புதிதாகத் தொடங்குவதற்கான வலிமையைக் கண்டறியும் திறனையும் போற்றும் ஒரு நாளாகவும் இது அமைகிறது.
பாதிக்கப்பட்டவர்களில் பலர் தங்களது வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்பி குறிப்பிடத்தக்க மைல்கற்களை அடைந்தனர். நமது நாட்டை ஒன்றிணைக்கும் நல்லிணக்கத்தின் பிணைப்புகளை வலுப்படுத்துவதற்கான நமது நீடித்த பொறுப்பை இந்த நாள் நினைவூட்டுகிறது’ என்றார்.
இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்ட எக்ஸ் பதிவில் கூறியதாவது,
`பிரிவினை கொடூரங்கள் நினைவு தினம் என்பது நாட்டின் பிரிவினை மற்றும் அதன் துயரத்தால் பாதிக்கப்பட்டவர்களின் வலியை நினைவுகூர்ந்து இரங்கல் தெரிவிக்கும் ஒரு நாள். இந்த நாளில், காங்கிரஸ் கட்சி தேசத்தை துண்டு துண்டாகப் பிரித்து, இந்தியத் தாயின் பெருமையைப் புண்படுத்தியது.
வன்முறை, சுரண்டல் மற்றும் அட்டூழியங்களுக்கு பிரிவினை வழிவகுத்தது, மேலும் லட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ச்சியை சந்தித்தனர். அந்த மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த அஞ்சலியை செலுத்துகிறேன். பிரிவினையின் இந்த வரலாற்றையும் வலியையும் நாடு ஒருபோதும் மறக்காது.
பிரிவினையின் இந்த பயங்கரத்தில் உயிர் இழந்தவர்களுக்கு எனது அஞ்சலியைச் செலுத்துகிறேன்’ என்றார்.