
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய-அமெரிக்க இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் ஜூலை 8-ம் தேதிக்குள் அறிவிக்கப்படலாம் என்றும், அதில் இடம்பெறவுள்ள அனைத்து விதிமுறைகளும் இரு தரப்பினராலும் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளன என்றும், நம்பத்தகுந்த வட்டாரங்கள் தகவல் தெரிவிப்பதாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.
இரு தரப்பு பேச்சுவார்த்தைகளை இறுதி செய்வதற்காக, மத்திய வர்த்தகத் துறையின் சிறப்புச் செயலாளர் ராஜேஷ் அகர்வால் தலைமையிலான இந்தியக் குழு அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் டி.சி.யில் உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு நாடுகள் மீதான பரஸ்பர வரிகளை விதிப்பதற்கான அதிபர் டிரம்பின் காலக்கெடு ஜூலை 9-ம் தேதியுடன் முடிவடையவுள்ளதால், இந்த ஒப்பந்தம் சரியான நேரத்தில் இறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த காலக்கெடுவை நீட்டிக்க வாய்ப்பு இல்லை என்று அதிபர் டிரம்ப் ஃபாக்ஸ் நியூஸுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தக இடைவெளியைக் குறைப்பதற்காக, இந்திய இறக்குமதிகள் மீது கடந்த ஏப்ரல் 2 அன்று அதிபர் டிரம்ப் அறிவித்த 26% கூடுதல் வரிகளை ஜூலை 9 வரை அமெரிக்கா நிறுத்தி வைத்துள்ளது. அதேநேரம் அடிப்படை இறக்குமதி வரியான 10% இன்னும் அமலில் உள்ளது.
இந்த 26% கூடுதல் வரியிலிருந்து முழுமையாக விலக்கு அளிக்க அமெரிக்காவிடம் இந்தியா கோரிக்கை வைத்திருந்த நிலையில், இடைக்கால வர்த்தகம் இறுதி செய்யப்பட்டுள்ளது.
விவசாயம், ஆட்டோமொபைல், தொழில்துறை உற்பத்தி பொருட்கள் ஆகியவற்றுக்கு இந்திய அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தில் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளன. மேலும், நடப்பாண்டு அக்டோபர் மாதத்திற்குள் வர்த்தக ஒப்பந்தத்தின் முதல் பகுதியை இறுதி செய்வதை இலக்காக வைத்து இரு தரப்பினரும் பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது.