தில்லி மதுபான ஊழல் வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட தில்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் வழங்கிய 21 நாட்கள் இடைக்கால் ஜாமீன் நேற்றோடு முடிவடைந்ததால் நீதிமன்ற உத்தரவுப்படி இன்று அவர் திஹார் சிறைக்குத் திரும்புகிறார்.
கடந்த வாரம் தன் இடைக்கால ஜாமீனை நீட்டிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்தார் கெஜ்ரிவால். ஆனால் கெஜ்ரிவாலின் மனுவை நிராகரித்த உச்ச நீதிமன்றம் ஜாமீன் பெற விசாரணை நீதிமன்றத்தை அணுகுமாறு உத்தரவிட்டது.
இதனைத் தொடந்து 7 நாட்கள் ஜாமீன் வழங்குமாறு தில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தை நேற்று அணுகிய கெஜ்ரிவால் தரப்பிடம், இந்த ஜாமீன் மனு மீதான உத்தரவை ஜூன் 5 அன்று பிறப்பிப்பதாக சிறப்பு நீதிபதி தெரிவித்தார். கெஜ்ரிவாலின் இந்த ஜாமீன் மனுவை மத்திய அரசு வழக்கறிஞர்கள் துஷார் மேத்தா, ராஜூ ஆகியோர் கடுமையாக எதிர்த்தனர்.
`நாட்டை சர்வாதிகாரத்திலிருந்து காக்க ஜெயிலுக்குச் செல்வதில் பெருமைப்படுவதாக’ கடந்த வெள்ளிக்கிழமை கெஜ்ரிவால் தனது சமூகவலைதளப் பக்கத்தில் பதிவு செய்திருந்தார்.