
வாடிக்கையாளர்களுக்கு பிரீமியம் சேவையை வழங்கிவந்த டாடா சன்ஸ் குழுமத்தின் விஸ்தாரா விமான நிறுவனம், நாளை (நவ.12) முதல் ஏர் இந்தியாவின் பேரில் சேவைகளைத் தொடரும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்திய விமான நிறுவனங்களில் வெளிநாடுகளைச் சேர்ந்த விமான நிறுவனங்கள் 49 சதவீதம் வரை பங்குகள் வைத்திருக்க மத்திய அரசு அனுமதி அளித்ததை அடுத்து, கடந்த ஜனவரி 2015-ல் விஸ்தாரா விமான நிறுவனம் தொடங்கப்பட்டது. விஸ்தாராவில் 51 சதவீத பங்குகள் டாடா சன்ஸ் குழுமத்தின் வசமும், 49 சதவீத பங்குகள் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் வசமும் இருந்தன.
உள்நாட்டுப் பயணங்களுக்கு பிரீமியம் சேவை வழங்கிய வகையில், பயணிகள் மத்தியில் அதிகமாகப் பிரபலமடைந்தது விஸ்தாரா நிறுவனம். இந்நிலையில், சுமார் ரூ. 18,000 கோடி ஒப்பந்தத்தின் அடிப்படையில் கடந்த அக். 2021-ல் இந்திய அரசிடம் இருந்து டாடா சன்ஸ் குழுமத்துக்குக் கைமாறியது ஏர் இந்தியா விமான நிறுவனம்.
இதனைத் தொடர்ந்து டாடா சன்ஸ் குழுமம் பெரும்பான்மையான பங்குகளை வைத்திருக்கும் விஸ்தாரா நிறுவனம், ஏர் இந்தியாவுடன் இணைக்கப்படும் என அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கின. இந்த இணைப்பு நடவடிக்கைக்கு தேசிய நிறுவன சட்ட தீர்பாயம் கடந்த 6 ஜூன் 2024-ல் ஒப்புதல் அளித்தது.
இந்நிலையில் விஸ்தாராவின் பெயரில் விமானங்கள் இயக்கப்படுவது இன்றே கடைசியாகும். நாளை முதல் விஸ்தாரா விமானங்கள் அனைத்தும் ஏர் இந்தியா என்ற பெயரில் இயக்கப்படும். விஸ்தாராவை ஏர் இந்தியாவுடன் இணைத்த பிறகு, ஏர் இந்தியாவின் 75 சதவீத பங்குகள் டாடா சன்ஸ் குழுமத்தின் வசமும், 25 சதவீத பங்குகள் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் வசமும் இருக்கும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
விமான நிறுவனத்தின் பெயரில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டாலும், வாடிக்கையாளர்களுக்கான சேவைகள் முன்பு போல அதே தரத்துடன் வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.