
முல்லைப் பெரியாறு அணையில் தண்ணீரைத் தேக்குவதில் எந்தப் பிரச்னையும் இல்லை எனவும், அது தொடர்பாக மீண்டும் மீண்டும் பேச முடியாது எனவும் கருத்து தெரிவித்துள்ளது உச்ச நீதிமன்றம்.
முல்லைப் பெரியாறு அணையின் பரமரிப்புப் பணிகள் குறித்த வழக்கை, நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு இன்று (ஜன.20) விசாரித்தது.
வழக்கு விசாரணையின்போது, அணையைப் பலப்படுத்தும் பணிகளையும், பராமரிப்புப் பணிகளையும் மேற்கொள்ளத் தொடர்ந்து கேரள அரசு முட்டுக்கட்டை போடுவதாகவும், பராமரிப்புப் பணிகளை செய்யவிடாமல் அணையைப் பாதுகாக்கும் நோக்கில் நிபுணர்கள் குழுவை அமைக்க வேண்டும் என்று மட்டும் கேரள அரசு கூறுவதாகவும், தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிட்டார்.
மேலும், அணையைப் பாதுகாக்க மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகளுக்கான அனுமதியையும், பேபி அணையைப் புனரமைக்கும் பணிகளுக்காகவும் அனுமதியையும் கேரள அரசு வழங்கவேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைத்தார் தமிழக அரசு வழக்கறிஞர்.
இதைத் தொடர்ந்து, அணைப் பாதுகாப்பை ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆய்வு செய்யும் வகையில் நிபுணர்கள் குழுவை அமைக்கவேண்டும் என்கிற வாதத்தை முன்வைத்துப் பேசினார் கேரள அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர்.
இருதரப்பு வாதங்களையும் கேட்டுக்கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள், `முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி வரை தண்ணீரைத் தேக்குவதில் எந்தப் பிரச்னையும் இல்லை, எனவே, மீண்டும் மீண்டும் அது குறித்துப் பேச வேண்டிய அவசியம் இல்லை. அணையைப் பலப்படுத்தும் வழக்கை மட்டும் இங்கு விசாரிக்கலாம். அணை விவகாரத்தில் தொடர்ந்து இரு தரப்பும் குற்றம் சாட்டினால் எந்தத் தீர்வும் ஏற்படாது’ என்றனர்.
இதனை அடுத்து, முல்லைப் பெரியாறு அணை கண்காணிப்புக் குழு அல்லது அணைப் பாதுகாப்புச் சட்டத்தின் படி அமைத்த குழு ஆகிய இரண்டில் எதன் பணி தொடர் வேண்டும் என்பது குறித்து இரு மாநில அரசுகளும் தங்களது பதிலைத் தெரிவிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை பிப்ரவரி 19-க்கு ஒத்திவைத்து உச்ச நீதிமன்ற அமர்வு.