
தீவிர அரசியலில் ஈடுபடுவதற்காகவே தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக பேட்டியளித்துள்ளார் குஷ்பு.
கடந்த 28 பிப்ரவரி 2023-ல் தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராகப் பதவியேற்றார் குஷ்பு. இந்நிலையில் தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினர் பதவியை அவர் ராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பாக தன் எக்ஸ் கணக்கில் அவர் வெளியிட்ட அறிவிப்பு பின்வருமாறு:
`அரசியலில் அர்ப்பணிப்பான 14 ஆண்டுகளுக்குப் பிறகு, இன்று இதயப்பூர்வமான மாற்றம் ஏற்பட்டுள்ளது. எங்கள் பாஜக கட்சிக்கு சேவை ஆற்றுவதில் முழுமையாக ஈடுபடுவதற்காக தேசிய மகளிர் ஆணையத்தில் இருந்து ராஜினாமா செய்கிறேன்.
இந்த வாய்ப்பை எனக்கு வழங்கியதற்காக பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா, தேசிய பொதுச் செயலாளர் பி.எல். சந்தோஷ் ஆகியோருக்கு மனமார்ந்த நன்றிகள். எனது விசுவாசம் எப்போதும் பாஜகவுடன் இருக்கிறது. முன்பை விட அதிகமான உற்சாகத்துடன் மீண்டும் நான் தீவிர அரசியலுக்கு வருகிறேன்’.
இன்று காலை தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நடந்த தேசியக்கொடி ஏற்றும் விழாவில் கலந்து கொண்டார் குஷ்பு. அப்போது அளித்த பேட்டியில், `கடந்த 8 மாதங்களாக ராஜினாமா செய்ய வேண்டும் என நினைத்திருந்தேன். நான் தீவிர அரசியலில் ஈடுபட ஆசைப்படுகிறேன், ஆனால் தேசிய மகளிர் ஆணையத்தில் இருக்கும்போது அரசியலில் ஈடுபட முடியாது.
எனவே இது குறித்து மேலிடத் தலைவர்களிடம் தெரிவித்து அவர்கள் ஒப்புதலுடன் பதவியை ராஜினாமா செய்திருக்கிறேன். நான் தேர்தலில் போட்டியிடுவது குறித்து கட்சி மேலிடம் தான் முடிவு செய்யும்’ என்றார் குஷ்பு.