ஜன் சுராஜ் கட்சித் தலைவரும், பிரபல தேர்தல் வியூக நிபுணருமான பிரசாந்த் கிஷோர், 2025-ல் நடைபெற இருக்கும் பீஹார் மாநில சட்டப்பேரவைப் பொதுத்தேர்தலில் 243 தொகுதிகளிலும் தன் கட்சி போட்டியிடும் என்று அறிவித்துள்ளார்.
மேலும் இந்தத் தேர்தலில் தன் கட்சி சார்பில் 40 பெண் வேட்பாளர்கள் களமிறக்கப்படுவார்கள் எனவும் அவர் தகவல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளவை பின்வருமாறு:
`2025 பீஹார் பொதுத்தேர்தலில் ஜன் சுராஜ் 243 இடங்களிலும் போட்டியிடுகிறது. அதில் குறைந்தபட்சம் 40 பெண் வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள். 2030-ல் 70 முதல் 80 வரையிலான பெண் வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள். பொருளாதார ரீதியில் பெண்கள் சுதந்திரமாக செயல்படும் வரை அவர்களுக்கு சமத்துவம் கிடைக்காது.
பெண்களின் வாழ்வாதாரத்துக்கு வருமானம் ஏற்படுத்தித் தரும் வகையில் அவர்களுக்குக் கடன் உதவி ஏற்படுத்தித்தர வேண்டும். அந்தக் கடன்களுக்கு அரசு உத்தரவாதத்தை வழங்க வேண்டும். எங்கள் அரசு அமையும்போது குறைவான வருமானம் காரணமாக பீஹாரைவிட்டு மக்கள் செல்வது தடுத்து நிறுத்தப்படும்.
தலைவர்களின் மகன்கள், மகள்களைப் பார்த்து மக்கள் வாக்கு செலுத்தக்கூடாது, தங்களின் மகன்கள், மகள்களைப் பார்த்தே மக்கள் தங்களின் வாக்குகளைச் செலுத்தவேண்டும்.
வளர்ச்சியைப் பற்றி தேஜஸ்வி யாதவ் பேசுவதைப் பார்க்கும்போது நகைப்பாக இருக்கிறது. 15 வருடங்கள் அவர்கள் அதிகாரத்தில் இருந்தார்கள். ஆனால் ஜிடிபி, ஜிடிபி வளர்ச்சி குறித்து எதுவுமே தெரிந்துகொள்ளாமல் பீஹாரின் வளர்ச்சி குறித்த கதையைப் பற்றி மட்டும் அவர் பேசிக்கொண்டிருக்கிறார்’ என்றார்.