ஓய்வை அறிவிக்கவே ஆர்எஸ்எஸ் தலைமை அலுவலகத்திற்கு பிரதமர் சென்றார்: சஞ்சய் ராவத்

கடந்த 10-11 வருடங்களில் அவர் ஆர்எஸ்எஸ் தலைமையகத்திற்கு ஒருபோதும் சென்றதில்லை. ஆட்சித் தலைமையில் மாற்றம் கொண்டுவர ஆர்எஸ்எஸ் விரும்புகிறது.
ஓய்வை அறிவிக்கவே ஆர்எஸ்எஸ் தலைமை அலுவலகத்திற்கு பிரதமர் சென்றார்: சஞ்சய் ராவத்
1 min read

தனது ஓய்வை அறிவிக்கவே பிரதமர் மோடி ஆர்எஸ்எஸ் தலைமை அலுவலகத்திற்கு சென்றதாகவும், அடுத்த பிரதமர் மஹாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்தவராக இருப்பார் என்றும் சிவசேனா (உத்தவ்) கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கருத்து தெரிவித்துள்ளார்.

மஹாராஷ்டிர மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, நாக்பூரில் உள்ள ஆர்எஸ்எஸ் தலைமை அலுவலகத்திற்கு நேற்று (மார்ச் 30) சென்றார். அவருடன், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, மஹாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் ஆகியோர் உடனிருந்தார்கள்.

ஆர்எஸ்எஸ் நிறுவனர் கேசவ் பலிராம் ஹெட்கேவர் மற்றும் முன்னாள் ஆர்எஸ்எஸ் தலைவர் எம்.எஸ். கோல்வால்கர் ஆகியோரின் நினைவிடங்களுக்குச் சென்று பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். கடந்த 2014-ல் பிரதமராகப் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து 11 ஆண்டுகளில் முதல்முறையாக ஆர்எஸ்எஸ் தலைமை அலுவலகத்திற்கு மோடி சென்றதால், இந்த வருகை தேசிய அளவில் பேசுபொருளானது.

இந்நிலையில், சிவசேனா (உத்தவ்) கட்சியின் மூத்த தலைவரும், எம்.பி.யுமான சஞ்சய் ராவத் மும்பையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது,

`தனது ஓய்வை அறிவிக்கவே பிரதமர் மோடி ஆர்எஸ்எஸ் தலைமை அலுவலகத்திற்கு சென்றார். எனக்குத் தெரிந்தவரை கடந்த 10-11 வருடங்களில் அவர் ஆர்எஸ்எஸ் தலைமையகத்திற்கு ஒருபோதும் சென்றதில்லை. ஆட்சித் தலைமையில் மாற்றம் கொண்டுவரவே ஆர்எஸ்எஸ் விரும்புகிறது. பிரதமர் மோடி விடைபெறுகிறார்.

மோடிக்குப் பிறகு பிரதமராகப் பொறுப்பேற்பவரை ஆர்எஸ்எஸ் முடிவு செய்யும். அவர் மஹாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்தவராக இருப்பார். அதனால்தான் அது குறித்து பேச்சுவார்த்தை நடத்த நாக்பூருக்கு மோடி அழைக்கப்பட்டார்’ என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in