உள்துறை அமைச்சரைச் சந்தித்த தமிழக எம்.பி.க்கள்
உள்துறை அமைச்சரைச் சந்தித்த தமிழக எம்.பி.க்கள்ANI

உள்துறை அமைச்சரைச் சந்தித்த தமிழக எம்.பி.க்கள்: வெள்ள நிவாரணத்தை விரைவாக வழங்கிட கோரிக்கை

தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ளச் சேதங்களுக்கு இழப்பீடாக ரூ. 37,907 கோடியை உடனே வழங்க வேண்டும் என்று கோரிக்கை
Published on

தமிழகத்தின் அனைத்துக் கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்களும் தில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை இன்று சந்தித்தார்கள். சமீபத்திய மழை வெள்ளப் பாதிப்புகளால் தமிழகத்தில் ஏற்பட்ட சேதங்களுக்கு நிவாரணமாக ரூ. 37,907 கோடியை உடனே வழங்க வேண்டும் என்று மத்திய அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.

கடந்த வாரம் சென்னையில் நடைபெற்ற அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, மத்திய அரசுக்கு அழுத்தம் தரவும், இது சம்பந்தமாக உள்துறை அமைச்சரை நேரில் சந்தித்து உடனடியாக மாநிலத்திற்கு நிவாரணம் வழங்குமாறு வேண்டுகோள் விடுப்பது என்றும் முடிவெடுக்கப்பட்டது.

மத்திய அரசு போதுமான நிதியைத் தமிழகத்திற்கு அளிக்கவில்லை என்கிற குற்றச்சாட்டை ஆளுங்கட்சியினர் தொடர்ந்து முன்வைத்து வருகிறார்கள். குறிப்பாக மத்திய உள்துறை அமைச்சர், தமிழகத்திற்கு என்ன செய்யப் போகிறார் என்று முதல்வர் ஸ்டாலின் கூட கேள்வி எழுப்பியிருந்தார்.

டிசம்பர் 2023-ல் அடுத்தடுத்து தொடர்ந்த மழை வெள்ள பாதிப்புகளால் தமிழகத்தின் உள்கட்டமைப்பு பெரிய அளவில் பாதிக்கப்பட்டிருக்கிறது. மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள மக்களின் வாழ்வதாரம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. மிக்ஜாம் புயலின் பாதிப்பால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளுவர் மாவட்டங்களைச் சேர்ந்த பல இடங்கள் பாதிக்கப்பட்டிருப்பதால் ரூ. 19,692 கோடி உள்பட, ஒட்டுமொத்த வெள்ள பாதிப்பு இழப்பீடாக ரூ. 37, 907 கோடி இழப்பீடு தரும்படி தமிழக அரசு கோரியுள்ளது.

மாநில அரசு கேட்கும் தொகையை முழுவதுமாக மத்திய அரசு இதுவரை தந்ததில்லை. சென்னையில் வெள்ள பாதிப்புகள் தேசிய அளவில் கவனத்திற்கு உள்ளான நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த எம்.பி.க்கள் மாநில அரசு கோரும் நிதியை மத்திய அரசு விரைவில் தரும் என்கிற நம்பிக்கையோடு உள்ளார்கள்.

logo
Kizhakku News
kizhakkunews.in