2026-ல் தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடிப்போம்: அண்ணாமலை

"கோவையில் ஒரு வேட்பாளராக நான் வாங்கிய 4.50 லட்சம் வாக்குகளும் பணம் கொடுக்காமல் பெற்றவை."
கோப்புப்படம்
கோப்புப்படம்

தமிழ்நாட்டில் 2026-ல் நாங்கள் ஆட்சியைப் பிடிப்போம் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் போட்டியிட்ட அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. இந்த நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, 2026-ல் தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடிப்பதே தங்களுடைய இலக்கு என்று தெரிவித்துள்ளார்.

"தேசிய அளவில் தேசிய ஜனநாயகக் கூட்டணி பெரிய சரித்திரத்தைப் படைத்து, ஜவஹர்லால் நேருவுக்குப் பிறகு தொடர்ந்து மூன்றாவது முறையாகப் பிரதமராகப் பதவியேற்கக்கூடிய அற்புதமான விஷயத்தை நம் பிரதமர் செய்து காட்டியிருக்கிறார்.

தொடர்ந்து 10 ஆண்டு காலம் ஆட்சியிலிருந்து உலக அரசியல் வரலாற்றில் மூன்றாவது முறையாக ஆட்சிக் கட்டிலில் அமர்வது ஒரு கடினமான செயல். இதை நம் தேசிய ஜனநாயகக் கூட்டணி முறியடித்துள்ளது.

அனைத்து வாக்காளர்களுக்கும் நாங்கள் நன்றிக்கடன் பெற்றுள்ளோம். இந்தியாவைப் பொறுத்தவரை நமக்கென்று இலக்கை வைத்து வேலை செய்தோம். ஒவ்வொரு மாநிலங்களிலும் தனிப்பட்ட முறையில் தனி இலக்கு. நிறைய மாநிலங்கள் இலக்கை அடைந்துள்ளன. சில மாநிலங்களில் எதிர்பார்த்த அளவுக்கு இடம் கிடைக்கவில்லை. ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், மிகப் பெரிய வெற்றியை மூன்றாவது முறையாகப் பெற்றுள்ளோம்.

தமிழ்நாட்டில் பாஜக வளர்ந்துள்ளது என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. தேசிய ஜனநாயகக் கூட்டணி சேர்ந்து வளர்ந்துள்ளோம். தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பாக நாடாளுமன்ற உறுப்பினர்களை அனுப்பிவைக்க வேண்டும் என எங்களுக்கு இலக்கு இருந்தது. இந்த இலக்கை எங்களால் அடைய முடியவில்லை என்பது எங்களுக்கு வருத்தம்தான். மிகக் கடுமையாக உழைத்தோம். ஆனால், இந்த முறை நாங்கள் எதிர்பார்த்தது நடக்கவில்லை.

வாக்கு சதவீதம் அதிகரித்திருக்கிறது. மக்கள் அனைத்து இடங்களிலும் பாஜகவுக்கு ஆதரவு தந்துள்ளார்கள். இதைப் படிப்பினையாக எடுத்துக்கொண்டு அடுத்து நடக்கவிருக்கக்கூடிய தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியைச் சேர்ந்தவர்களை நாடாளுமன்றத்துக்கு அனுப்புவோம் என்கிற உறுதியை எடுத்திருக்கிறோம்.

மக்கள் கொடுத்துள்ள தீர்ப்பை பாஜக, தேசிய ஜனநாயகக் கூட்டணி தலை வணங்கி ஏற்றுக்கொள்கிறோம். வாக்கு சதவீதத்தை மக்கள் அதிகரித்துள்ளார்கள். ஆனால், இதை எம்.பி.க்களாக மாற்ற முடியவில்லை. எனவே, மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறோம். 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றவர்களுக்கு வாழத்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

பாஜகவைப் பொறுத்தவரை எங்களுடைய இலக்கு 20 சதவீதம் வாக்கு வங்கியை அடைய வேண்டும். தேசிய ஜனநாயகக் கூட்டணி சேரும்போது 25 சதவீதத்தைத் தாண்ட வேண்டும். இது எங்களுக்கு நாங்கள் வைத்துள்ள இலக்கு.

கோவையில் ஒரு வேட்பாளராக நான் வாங்கிய 4.50 லட்சம் வாக்குகளும் பணம் கொடுக்காமல் பெற்றவை. அதேபோல வேட்பாளர்கள் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். நாங்கள் இன்னும் மக்களைப்போய் சந்திக்க வேண்டும், இன்னும் கடுமையாக உழைக்க வேண்டும் என்பதைப் புரிந்துகொண்டுள்ளோம்.

11 சதவீத வாக்கு வங்கியைப் பெற்றுள்ளோம். எங்களுடைய இலக்கு 20 சதவீதம். இதைத் தோல்வியாகப் பார்க்கவில்லை. கோவையில் அதிமுகவைப் பின்னுக்குத் தள்ளியதை வெற்றியாகப் பார்க்கிறோம். தமிழ்நாட்டில் பல இடங்களில் மும்முனைப் போட்டியாக இதை மாற்றியதை வெற்றியாகப் பார்க்கிறோம். பெரிய கட்சிகளினுடைய வாக்கு சதவீதத்தைக் கீழே கொண்டு வந்துள்ளோம் இதுவும் வெற்றிதான்.

தற்போதும் நான் அதீத நம்பிக்கையுடன்தான் இருக்கிறேன். 2026-ல் நாங்கள் ஆட்சியைப் பிடிப்போம். இதுதான் எங்களுடைய இலக்கு. அப்படிதான் ஒரு தலைவர் இருக்க வேண்டும். அப்படிதான் இலக்குகளை வைத்து பயணிக்க வேண்டும். தமிழ்நாட்டில் 2026-ல் கூட்டணி ஆட்சி மலரும். ஒரு கட்சி ஆட்சிமுறையை மக்கள் நிராகரிப்பார்கள். 2026-ல் முதன்முறையாகக் கூட்டணி ஆட்சி நடக்கும் என்பது என்னுடைய கணிப்பு" என்றார் அண்ணாமலை.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in