
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த திரிணாமூல் எம்.பி. மஹுவா மொய்த்ராவும், ஒடிஷாவைச் சேர்ந்த பிஜு ஜனதா தளம் கட்சியின் முன்னாள் எம்.பி. பினாகி மிஸ்ராவும் ஜெர்மனியில் திருமணம் செய்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இரு தலைவர்கள் மற்றும் அவர்கள் சார்ந்து இருக்கும் கட்சியினரால் வெளியிடப்படாத இந்த திருமணம் குறித்த தகவல், இந்தியா டுடே மற்றும் தி டெலிகிராஃப் ஆன்லைன் ஆகிய ஊடகங்களால் வெளியிடப்பட்ட புகைப்படம் மூலம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இருவரும் சிரித்துக்கொண்டு கைகோர்த்து நடப்பதை அந்த புகைப்படம் காட்டுகிறது.
1974-ல் அஸ்ஸாமில் பிறந்த மஹுவா மொய்த்ரா, அமெரிக்காவில் பட்டப்படிப்பை முடித்துவிட்டு, முதலீட்டு ஆலோசகர் பணியைத் தொடங்கினார். பின்னர் வெளிநாட்டுப் பணியைத் துறந்துவிட்டு அரசியலில் நுழைந்த மொய்த்ரா, 2010-ல் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி இணைந்தார்.
2016 தேர்தலில் கரீம்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று மேற்குவங்க சட்டப்பேரவையில் முதல்முறையாக நுழைந்தார். இதைத் தொடர்ந்து 2019 மக்களவை தேர்தலில் கிருஷ்ணா நகர் தொகுதியில் திரிணாமூல் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.
நாடாளுமன்றத்தில் அக்கட்சியின் பிரபலமான எம்.பி.க்களில் ஒருவரான மொய்த்ரா தனது ஆவேசமான உரைகளுக்குப் பேர் போனவர். 2024 மக்களவைத் தேர்தலில் கிருஷ்ணா நகர் தொகுதியில் நின்று மீண்டும் வெற்றி பெற்றார்.
1959-ல் ஒடிஷாவின் பூரியில் பிறந்த பினாகி மிஸ்ரா காங்கிரஸில் தன் அரசியல் வாழ்க்கையை தொடங்கினார். வழக்கறிஞரான மிஸ்ரா, பூரி தொகுதியின் காங்கிரஸ் எம்.பி.யாக 1996-ல் தேர்வானார். இதைத் தொடர்ந்து நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம் கட்சியில் இணைந்து 2009 தொடங்கி தொடர்ந்து மூன்று முறை பூரி எம்.பி.யாக தேர்வானார்.