மேற்கு வங்க அரசு மீது அதிருப்தியை வெளிப்படுத்திய திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. ஜவஹர் சர்கார், ராஜினாமா செய்யவுள்ளதாக மமதா பானர்ஜிக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் ஆர்ஜி கர் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுக்கப் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தை மாநில அரசு கையாண்ட விதம் மிகுந்த ஏமாற்றத்தை அளித்திருப்பதாகக் குறிப்பிட்டு முதல்வர் மமதா பானர்ஜிக்கு ஜவஹர் சர்கார் கடிதம் எழுதியுள்ளார்.
"மாநிலங்களவையில் மேற்கு வங்கத்தின் பிரச்னைகள் குறித்து குரல் எழுப்புவதற்கான வாய்ப்பை வழங்கியதற்கு நன்றி. நாடாளுமன்ற உறுப்பினர் பொறுப்பை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளோம். அரசியலிலிருந்தும் விலகுகிறேன். ஆர்ஜி கர் மருத்துவமனையில் நிகழ்ந்த சம்பவத்துக்குப் பிறகு ஒரு மாத காலமாக கடுமையாகப் பாதிக்கப்பட்டேன். பழைய மமதா பானர்ஜி பாணியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பயிற்சி மருத்துவர்களிடம் நேரடியாகப் பேசுவீர்கள் என எதிர்பார்த்தேன். அது நடக்கவில்லை. அரசு எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் எதுவும் போதாது, அதுவும் காலதாமதமான நடவடிக்கைகள் இவை.
ஊழல் மருத்துவர்களின் கூட்டம் மீதும் நிர்வாக நடவடிக்கைகளை சரிவர செய்யாதவர்கள் மீதும் நடவடிக்கைகள் எடுத்து தண்டிக்கப்பட்டிருந்தால், மாநிலத்தில் எப்போதோ இயல்பு நிலை திரும்பியிருக்கும்" என்று அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இவர் 2021-ல் திரிணமூல் காங்கிரஸில் இணைந்தார்.
கடந்த சில வாரங்களாக ஆர்ஜி கர் மருத்துவமனை விவகாரத்துக்கு கட்சிக்குள்ளேயே எதிர்ப்புகள் கிளம்பத் தொடங்கியுள்ளன. அரசு மருத்துவமனை நிர்வாகம் குறித்து விமர்சித்துப் பேசிய சாந்தனு சென் கட்சிப் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். மூத்த தலைவர் சுகேந்து சேகர் பயிற்சி மருத்துவர் சம்பவத்தில் காவல் துறையின் விசாரணையைக் கேள்விக்குள்ளாக்கியிருந்தார்.