
ஐபிஎல் கோப்பையை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வென்றதைக் கொண்டாடுவதற்காக பெங்களூருவில் நேற்று (ஜூன் 4) நடைபெற்ற விழாவின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 11 நபர்களில், தமிழகத்தின் திருப்பூரை சேர்ந்த இளம்பெண்ணும் ஒருவர் என்ற செய்தி வெளியாகியுள்ளது.
கடந்த ஜூன் 3-ல் நடைபெற்ற ஐபிஎல் இறுதிச் சுற்றில், பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஐபிஎல் கோப்பையை முதல்முறையாக வென்றது. நேற்று (ஜூன் 4) மாலை கோப்பையுடன் பெங்களூரு திரும்பிய ஆர்.சி.பி. வீரர்கள் அம்மாநில அரசின் தலைமையைச் செயலகமான விதான சௌதாவிற்கு அழைத்து வரப்பட்டனர்.
அங்கு திறந்த வெளியில் நடைபெற்ற விழாவில் ஆளுநர் தவார்சந்த் கெலாட், முதல்வர் சித்தராமையா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த விழாவைக் காண ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான ரசிகர்கள் கூடியதால், அந்த பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து, கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கத்தால் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஆர்.சி.பி. வீரர்களுக்கு பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த விழாவில் கலந்துகொள்ள ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மைதானம் அமைந்துள்ள பகுதியில் திரண்டிருந்தனர்.
குறிப்பாக, மைதானத்தின் 6 மற்றும் 7-வது கேட் வழியாக உள்ளே நுழைய ரசிகர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டபோது, ஏராளமானோர் ஒரே நேரத்தில் முண்டியடித்ததால் அப்பகுதியில் கடும் நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி பலர் மயங்கி விழுந்தனர், மேலும் பலர் காயமடைந்தனர்.
அவர்களுக்கு அனைவருக்கும் முதலுதவி வழங்கப்பட்டு, அருகிலுள்ள பவுரிங் மற்றும் வைதேகி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் ஒரு இளம்பெண், ஒரு குழந்தை உள்ளிட்ட 11 பேர் உயிழந்ததாக அதிகாரபூர்வ செய்தி வெளியானது.
இந்நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த அந்த இளம்பெண் தமிழகத்தின் திருப்பூரைச் சேர்ந்த 28 வயதான காமாட்சி தேவி என்ற செய்தி தற்போது வெளியாகியுள்ளது. அவர் பெங்களூருவில் உள்ள அமேசான் நிறுவனத்தில் பணியாற்றி வந்ததாகவும், உடுமலைப்பேட்டை விவேகானந்தா வித்யாலயம் பள்ளியின் தாளாளர் மூர்த்தியின் மகள் என்றும் கூறப்படுகிறது.