
ஆதார் தகவல்களை இலவசமாகப் புதுப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டித்து அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது இந்திய தனித்துவ அடையாள அமைப்பு.
10 வருடங்களுக்கு முன் ஆதாரைப் பெற்ற சுமார் 40 கோடி இந்தியர்கள் தங்களது ஆதார் விவரங்களைப் புதுப்பிக்கவில்லை என்பதால், செப்.14-க்குள் இலவசமாக ஆதாரைப் புதுப்பித்துக்கொள்ளலாம் என்று முன்பு அறிவித்தது இந்திய தனித்துவ அடையாள அமைப்பு. செப்டம்பர் 15 முதல் ஆதார் விவரங்களைப் புதுப்பிக்க ரூ. 50 கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் செய்தி வெளியானது.
ஆதார் விவரங்களை இலவசமாக புதுப்பிப்பது தொடர்பான இந்த அறிவிப்பு கடந்த வாரம் முதல் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டது. இதை அடுத்து ஆதாரைப் புதுப்பிக்க நாடு முழுவதும் உள்ள ஆதார் சேவை மையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இந்நிலையில் ஆதார் விவரங்களை இலவசமாகப் புதுப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டித்து நேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது இந்திய தனித்துவ அடையாள அமைப்பு.
ஆதார் பயனாளர்களின் கோரிக்கையை ஏற்று அடுத்த 3 மூன்று மாதங்களுக்கு, அதாவது வரும் டிசம்பர் 14 வரை ஆதார் விவரங்களை இலவசமாகப் புதுப்பித்துக்குக்கொள்ளலாம் என்று இந்திய தனித்துவ அடையாள அமைப்பு வெளியிட்ட குறிப்பாணையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆதார் சேவை மையங்களுக்கு சென்று ஆதார் விவரங்களைப் புதுப்பிக்கலாம், அல்லது myaadhaar.uidai.gov.in என்ற இணையதளத்தின் மூலமாகவும் ஆதாரைப் புதுப்பிக்கலாம் என்று அறிவித்துள்ளது இந்திய தனித்துவ அடையாள அமைப்பு.